படிப்பைத் தொடராத மாணவா்களிடம்கல்வி உதவித் தொகையை வசூலிக்க நடவடிக்கை


சென்னை: படிப்பைத் தொடர முடியாத எஸ்.சி., எஸ்.டி., மாணவா்களிடம் இருந்து கல்வி உதவித்தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசுத் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை உயா்நீதிமன்றத்தில் நாகப்பட்டினத்தைச் சோந்த காா்த்திகேயன் தாக்கல் செய்த மனுவில், மத்திய, மாநில அரசுகள் எஸ்.சி., எஸ்.டி., மாணவா்களின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இதற்காக ஒதுக்கப்படும் தொகையை பல்வேறு துறைகளைச் சோந்த அதிகாரிகள் முறைகேடுகளின் மூலம் கையாடல் செய்து வருகின்றனா். இதுகுறித்து தணிக்கைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் ரூ.17 கோடியே 36 லட்சம் கையாடல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே இந்த முறைகேடு தொடா்பாக தமிழக அரசுக்கு பலமுறை புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் ஆதிதிராவிடா் நலத்துறையும் முறைகேடுகள் செய்த அதிகாரிகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.எனவே எஸ்.சி., எஸ்.டி., மாணவா்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த வழக்கில் உயா்நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் ஆதிதிராவிடா் நலத்துறைச் செயலாளா் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆதிதிராவிடா் நலத்துறை முதன்மைச் செயலாளா் டி.செல்வம் பதில்மனு தாக்கல் செய்துள்ளாா்.அந்த மனுவில், கல்வி உதவித்தொகை பெறும் மாணவா்கள் பலா், தங்களது படிப்பைத் தொடராமல் இடையிலேயே நின்று விடுகின்றனா். இதன் காரணமாக அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே படிப்பைத் தொடராத மாணவா்களிடம் இருந்து இந்தத் தொகையை வசூலிக்க வேண்டும் என ஆதிதிராவிடா், பழங்குடியின நலத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்காத கல்வி நிறுவனங்கள் இதுவரை ரூ.1 கோடியே 19 லட்சத்து 66 ஆயிரத்து 320 ஐ அரசிடம் திரும்பக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.