உலகிலேயே மிகப்பெரிய பள்ளி: லக்னோவில் கின்னஸ் சாதனை


உலகிலேயே மிகப்பெரிய பள்ளியாக லக்னோவில் உள்ள தனியார் பள்ளி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. லக்னோவைச் சேர்ந்த சிட்டி மாண்டிசோரி பள்ளியில், 2019-20 ஆம் கல்வியாண்டில் 55,547 மாணவர்கள் படிக்கின்றனர். அப்பள்ளி, உலகிலேயே மிகப்பெரிய பள்ளி என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்துப் பேசிய பள்ளியின் நிறுவனர் ஜெகதீஷ் காந்தி, ''இந்தப் பள்ளியை வெறும் 5 மாணவர்களைக் கொண்டு ஆரம்பித்தேன்.எங்கள் பள்ளி உலகத்திலேயே மிகப்பெரிய பள்ளியாக மாறும் என்று நான் கற்பனை செய்ததுகூட இல்லை. இப்போது 18 இடங்களில் பள்ளிகள் இயங்கி வருகின்றன. சுமார் 56 ஆயிரம் மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். எங்கள் பள்ளிக்கு அவர்களின் குழந்தைகளை நம்பி அனுப்பிய பெற்றோரின் நம்பிக்கையாலும் ஆசியாலுமே இது அனைத்தும் சாத்தியமாகி உள்ளது. நாங்கள் மாணவர்களின் கல்வி, சமூக மற்றும் ஆன்மிக அறிவை சமமாக வளர்த்தெடுக்கிறோம். அவர்களுக்கு மனிதத்தையும், அமைதி மற்றும் ஒற்றுமையின் முக்கியத்தையும் போதிக்கிறோம். கல்வி அறிவில் உயர் தரத்துடன் விளங்கும் எங்கள் மாணவர்கள், சர்வதேசத் தேர்வுகளில் தேர்ச்சி அடையும் அளவுக்குத் திறன் வாய்ந்தவர்களாக உள்ளனர்'' என்றார்.லக்னோ, கோமதி நகர் கிளை, சிட்டி மாண்டிசோரி பள்ளியின் முதல்வர் அபா ஆனந்த் கூறும்போது, ''சிறப்பாக கல்வியை வழங்க முயன்ற எங்கள் நிறுவனரின் தொடர்ச்சியான தேடுதலும் உழைப்புமே எங்களையும் அதிகம் செயல்பட வைத்தது. எங்கள் பள்ளி மாணவர்களை சிறப்புத் தகுதி பெற்றவர்களாகவும் உயர்ந்த குணநலன் கொண்டவர்களாகவும் நாங்கள் மாற்றுகிறோம்'' என்றார்.