அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடை வழங்கிய முன்னாள் மாணவர்!


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே இருக்கும் அம்மைய நாயக்கனூரில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 100% சேர்க்கை நடைபெற்றுள்ள இப்பள்ளியில் தலைமை ஆசிரியரான ஆர்தர் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதனால் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன.


இப்பள்ளியில் அம்மையநாயக்கனூர், கொடைரோடு, மற்றும் சிறுமலை அடிவாரம் பகுதியில் இருந்து மாணவர்கள் வந்து படிகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் மாணவர்கள் பள்ளிக்கு நடந்து வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவரான கொடைரோடு தொழிலதிபர் விஜயகுமார் நடந்து பள்ளிக்கு வரும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் வண்ண குடைகளை வாங்கி கொடுத்து பள்ளிக் குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தேவை அறிந்து உதவிய விஜயகுமாரின் சேவைக்கு ஆசிரியர்களும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.