Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 7, 2019

ஆன்மீகத் தமிழை வளர்ப்போருக்குத் திருமூலர் விருது! தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் வழங்கினார்.

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திருமூலர் ஆய்வு இருக்கையின் சார்பில் பட்டயமளிப்பு விழா அக்டோபர் 06 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது!

இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் அவர்கள் கலந்துகொண்டு ஆன்மீகத் தமிழை வளர்ப்போருக்குத் திருமூலர் விருதினையும் வழங்கி சிறப்பித்தார்.



இவ்விருது உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் உள்ளிட்ட 10 பேருக்கு வழங்கப்பட்டது. மேலும், திருமந்திரம், திருவாசகம், காலக்கணிதம் போன்ற பட்டயப்படிப்புகளை முடித்த மாணவர்களுக்குச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசுகையில், அறிவியல் தமிழைப் போன்று ஆன்மீகத் தமிழும் இடம்பெறும். மத்திய அரசு அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை விருப்பப்பாடமாகக் கொண்டு வந்துள்ளது. திருமூலரும் வள்ளலாரும் நவீன முறையில் ஆன்மிகத் தமிழை வளர்த்த மகான்கள். வடலூரை, ஆன்மீக நகரமாக அறிவிக்க மக்களிடமிருந்து கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றது என்று கூறினார்.



உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் பேசுகையில் அறிவு + பக்தி இரண்டும் இணைந்தது தான் ஆன்மீகம். திருமூலரின் வாக்குப்படி 'தன்னையே தான் அறிவது அறிவு'.

அத்தகைய அறிவை பெற்றவர்களால் மட்டுமே இந்த உலகை வளப்படுத்த முடியும் என்று கூறினார்.

திருமூலர் ஆய்வு இருக்கையின் பொறுப்பாளர் பேராசிரியர் தி. மகாலட்சுமி அவர்கள் பேசுகையில் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்', 'யான் பெற்ற இன்பம் பெருக வையகம்' என்னும் திருமூலரின் கோட்பாட்டின் வழி நின்று மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் அறவழியில் நின்று இவ்வுலக வாழ்க்கையினை வாழ்வதற்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திருமூலர் ஆய்வு இருக்கை வழிவகை செய்து வருகிறது என்று கூறினார்.



இப்பட்டயமளிப்பு விழாவில் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சான்றிதழ்களைப் பெற்றனர்.