சிறப்பாசிரியர் நியமனத்தில் தமிழ்வழி கல்விக்கான ஒதுக்கீட்டை மறுப்பதா?:

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட பாடங்களுக்கான பகுதி நேர சிறப்பாசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியலை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வானவர்களின் பட்டியலில் தமிழ் வழியில் படித்தவர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. ஏற்கனவே பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் 38 ஓவிய ஆசிரியர்களின் பெயர் இப்போது நீக்கப்பட்டுள்ளது. அவர்களில் 33 பேர் தமிழ் வழியில் படித்தவர்கள். அவர்கள் மட்டுமின்றி, தமிழ் வழியில் படித்த 37 பேர் உள்ளிட்ட 76 ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இதேபோல், இசை, தையல் உள்ளிட்ட மற்ற பாடங்களுக்கான சிறப்பாசிரியர்கள் நியமனத்திலும் குளறுபடிகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய அமைப்புகளில் இயக்குனர் நிலையிலுள்ள அதிகாரிகள் மட்டத்தில்தான் குழப்பங்கள் நடந்திருப்பதாகத் தெரிகிறது. எனவே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். அதில் தெரியவரும் உண்மைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட தமிழ்வழி சிறப்பாசிரியர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.