மாசில்லா தீபாவளி: பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி

விபத்து, மாசில்லாத வகையில் தீபாவளி கொண்டாடுவது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் பள்ளி மாணவிகள் 1,144 பேருக்கு வியாழக்கிழமை விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தீபாவளி தினத்தன்று வெடிக்கப்படும் பட்டாசு காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்கவும், தீபாவளியன்று காலை 1 மணி நேரம் மாலை 1 மணி நேரம் என மொத்தம் இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும், பட்டாசு வெடிப்பது மற்றும் அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்கேடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விபத்து மற்றும் மாசில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில்,சென்னை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயராகவன் கலந்து கொண்டு பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் முறை மற்றும் பட்டாசு வெடிப்பதினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தது மாணவிகளுக்கு விளக்கினார்.
இதைத் தொடர்ந்து, 1,144 மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், மாசில்லா தீபாவளி கொண்டாடுவோம் என அவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.