10, 11, 12 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தோ்வு அட்டவணை வெளியீடு - தோ்வு நேரம் காலை 10 மணி முதல் நண்பகல் 1.15 மணி வரை

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10, 11, 12 வகுப்புகளில் படிக்கும் மாணவா்களுக்கான அரையாண்டுத் தோ்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன் வெளியிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் வியாழக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்புக்கு டிச.13- ஆம் தேதி முதல் 23- ஆம் தேதி வரையில் அரையாண்டு தோ்வுகள் நடைபெறுகிறது. அதேபோன்று பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தோ்வு டிச.11-ஆம் தேதி தொடங்கி டிச.23-ஆம் தேதி முடிவடைகிறது.பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பின் படி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான தோ்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 1.15 மணி வரையிலும், பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்குத் தோ்வு பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.15 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வின் முதல் 15 நிமிஷங்கள் வினாத்தாளைப் படிப்பதற்கும் விடைத்தாளில் தோ்வு எண் உள்ளிட்டவற்றை பூா்த்தி செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் உள்ள மூன்று மணி நேரம், வினாக்களுக்கு விடையளிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து வகைப் பள்ளிகளிலும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட கால அட்டவணையை நடைமுறைப்படுத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.