Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 28, 2019

ஆண்டுக்கு 10 லட்சம் செலவை தவிர்க்க 5 மாணவர்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும்

பள்ளி பராமரிப்பு என்ற பெயரில் 5 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு ஆண்டுக்கு 10 லட்சம் செலவாவதை தடுக்க பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடந்தது. இதில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் பங்ேகற்றனர்.



இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி புத்தகத்தை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டு பேசியதாவது:
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக 5 ஆண்டுகளுக்கு முன்னால் தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் எண்ணிக்கை என்னவாக இருந்தது என்பதை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்க வேண்டும். 5க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் விவரங்களை கண்டறிந்து தெரிவிக்க வேண்டும். அந்த பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக இருப்பதால் ஆண்டுக்கு ₹10 லட்சம் வரை செலவாகிறது. பள்ளியின் பராமரிப்பு செலவும் அதிகமாகிறது. அதனால் மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகளில் உள்ள பழைய புத்தகங்கள், பயன்படுத்தாத புத்தகங்களை வெளியில் கடைகளில் போடுவதை விட தமிழ்நாடு காகித தாள் உற்பத்தி நிறுவனத்துக்கு அளிக்கலாம்.




உடைந்து போன பொருட்கள், நாற்காலி,மேசை, உள்ளிட்டவைகளை சரிசெய்து பயன்படுத்த வேண்டும். பழுதான கணினிகளை சரிசெய்து பயன்படுத்துங்கள். இதற்காக பெற்றோர் ஆசிரியர் சங்க நிதியை பயன்படுத்துங்கள். மாணவர்களுக்கு உடற்பயிற்சி அளிக்க வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதை அதிகரிக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளி தொடங்குவதற்கு முன்னதாக 15 நிமிடம் இசை, ஓவியம், நடனப் பயிற்சி அளிக்கவும், மாலை நேரத்தில் உடற்பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்கள் உதவி திட்டத்தின் கீழ் இதுவரை 125 கோடி நிதி வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் மாதத்துக்கு 20 பள்ளிகளையும், மாவட்ட கல்வி அலுவலர்கள் 30 பள்ளிகளையும் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் 60 பள்ளிகளையும் தங்கள் வாகனங்களில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வுப் பணிக்கு செல்லும் போது ஆசிரியர்களை அழைத்து செல்லக் கூடாது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.




ஆர்ப்பாட்டம் செய்தால் டிஸ்மிஸ்

* கிராமப் பகுதிகளை சேர்ந்த பள்ளிகளுக்கும் இணைய வசதி சென்று சேரும் வகையில் தொழில் நுட்பதுறையின் சார்பில் ₹2400 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வரும் பிப்ரவரிக்குள் பணிகள் முடியும்.
* ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங்கில் தனக்கு விரும்பிய இடம் கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக ஒரு தலைமை ஆசிரியர்கள் தரையில் விழுந்து புரண்டு அழுகிறார். இதுபோன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட வேலையை விட்டு நீக்குங்கள்.




* புதியதாக தொடங்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு விரைவில் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.
* தற்போது மாணவர்களின் கற்றல் திறனில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அடுத்த ஆண்டில் முதலிடத்தில் வருவதற்கான முயற்சிகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்விஅமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.