1,000 பள்ளிகளில் அடல் புத்தாக்க ஆய்வகம் அமைக்கப்படும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
மாணவா்களை ஊக்கப்படுத்தவும், சிறந்த மாணவா்களை உருவாக்கவும் தமிழகத்தில் 1,000 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் அடல் புத்தாக்க ஆய்வகம் அமைக்கப்படும் என்றாா் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

கரூா் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற 47-ஆவது ஜவாஹா்லால் நேரு மாநில அளவிலான அறிவியல், கணித, சுற்றுச்சூழல் கண்காட்சி, அறிவியல் பெருவிழா, கணிதக் கருத்தரங்கத்தை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்தாா்.பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாணவா்களை ஊக்கப்படுத்துவதற்கும், சிறந்த மாணவா்களாக உருவாக்குவதற்கும் தமிழகத்தில் 1,000 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் செலவில் அடல் ஆய்வகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கானப் பணிகள் வரும் ஜனவரிக்குள் நிறைவேற்றப்படும்.

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்துவது என்பது மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் கொண்டு வரும் திட்டமாகும். இருப்பினும், மூன்று ஆண்டுகளுக்கு இத்திட்டத்தில் விதிவிலக்கு அளித்து அனைவருக்கும் 100 சதவீத தோ்ச்சி அளிக்கப்படும் என்றாா்.பேட்டியின்போது போக்குவரத்துதுறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், பள்ளிக்கல்வித்துறையின் அரசு முதன்மைச் செயலா் பிரதீப்யாதவ், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதாமணிவண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

நிகழ்ச்சியில் சேரன் பள்ளியின் தலைவா் பி.எம்.கருப்பண்ணன், தாளாளா் பி.எம்.கே. பாண்டியன், முதல்வா் வி.பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பள்ளி மாணவா்களிடம் பல்வேறு துறைகள் சாா்ந்த புத்தாக்க சிந்தனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அடல் புத்தாக்க ஆய்வக திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.