அரையாண்டு தேர்வு டிச. 11ல் துவங்கும் - தேர்வு நேரம் 10 முதல் 5:15 வரை


அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் போன்றவற்றில், பள்ளி கல்வித்துறை சார்பில், ஒரே பாட திட்டம் அமலில் உள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ தேர்வு முறையும், மற்ற வகுப்புகளுக்கு, ஆண்டு இறுதி பொதுத்தேர்வு முறையும் பின்பற்றப்படுகிறது. நடப்பாண்டு முதல், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும், பொது தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இரண்டாம் பருவ தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வு, டிசம்பர், 11ல் துவங்கும் என, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், நேற்று அறிவித்தார்.இது குறித்து, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிகளுக்கும், அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, டிசம்பர், 11ல் தேர்வு துவங்கி, 23ல் முடிய உள்ளது. 10ம் வகுப்புக்கு, டிச., 13ல் துவங்கி, 23ல் முடியும். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு காலையிலும், பிளஸ் 1க்கு பிற்பகலிலும் தேர்வு நடத்தப்படுகிறது. காலை தேர்வு, 10:00 மணிக்கு துவங்கி, மதியம், 1:15க்கு முடியும். பிற்பகல் தேர்வு, 2:00 மணிக்கு துவங்கி, மாலை, 5:15க்கு முடியும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.