நவ.29ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் வரும் 2020ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு கட்டணம்: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


நாகர்கோவில்: வரும் 2020ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ஆன்லைனில் வரும் 29ம் தேதிக்குள் செலுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2020ம் ஆண்டு பிளஸ் 2 பொது தேர்வில் தமிழை பயிற்றுமொழியாக கொண்டு தேர்வு எழுதும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்எஸ், எஸ்டி இனத்தை சேர்ந்த மாணவர்கள், தமிழ் வழி தவிர இதர பயிற்று மொழிகளில் பயில்பவராக இருந்தாலும் அவர்களும் தேர்வு கட்டண விலக்கிற்கு தகுதியானவர்கள்.ஓபி, பிசி, பிசிஎம், எம்பிசி/ டிசி இனத்தில் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் எந்த மொழி வாயிலாக பயின்றாலும் தேர்வு கட்டண விலக்கு உண்டு. கண்பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் ஆகிய மூன்று வகை மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டாம். தேர்வு கட்டண விலக்கிற்கு தகுதியானவர்களில் செய்முறை கொண்ட பாடங்களாகிய பாட தொகுப்பில் பயில்வோருக்கு மொத்த கட்டணமாக ரூ.225க்கும், செய்முறை இல்லாத பாடங்களாகிய பாட தொகுப்பிற்கு ரூ.175க்கும் முழுமையாக விலக்கு அளிக்கப்படும்.மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயின்று பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு கட்டண விலக்கு பெற தகுதியானவர்கள் அல்ல. மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வின் தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ஆன்லைன் மூலமாக இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய அனைத்து பள்ளிகளும் எந்த ஒரு பள்ளியும் விலக்கு இல்லாமல் ரூ.300 வீதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம் எவ்வளவு?
* செய்முறை கொண்ட பாடங்களடங்கிய பாடத்தொகுப்பில் பயில்வோர் தேர்வு கட்டணம் ரூ.200, மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் ரூ.20, சேவை கட்டணம் ரூ.5 என்று மொத்தம் ஒரு மாணவருக்கு ரூ.225 செலுத்த வேண்டும்.

* செய்முறை இல்லாத பாடங்களாகிய பாட தொகுப்பில் பயில்வோர் தேர்வு கட்டணம் ரூ.150, மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் ரூ.20, சேவை கட்டணம் ரூ.5 என்று மொத்தம் ஒரு மாணவருக்கு ரூ.175 செலுத்த வேண்டும்.