5 ஆண்டுகளில்.. 12,00,000 வேலைவாய்ப்புகள் - நாஸ்காம் தகவலால் மகிழ்ச்சி .!!

கல்வி, தொழில்நுட்பம், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களால், 12 லட்சம் நேரடி வேலைவாய்ப்பு உருவாகும் என நாஸ்காம் அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.
தேசிய மென்பொருள் சேவைகளுக்கான அமைப்பாக செயல்படும் நாஸ்காம் (NASSCOM) அமைப்பு, இந்தியாவின் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.அதில், இந்திய இளைஞர்கள் தற்போது தொழில்நுட்பம் சார்ந்த அறிவை இணையம் மூலம் எளிதில் பெற்றுக்கொள்ளும் வசதி கொண்டுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு துறைகளில் தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு இந்த இளைஞர்கள் தகுதி பெறும் சூழல் நிலவுகிறது.


2014ஆம் ஆண்டுக்குப்பின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி 40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு(A.I) சார்ந்த தொழில்நுட்பம் கொண்டு, கல்வி, மனித வளம், விண்வெளி, பாதுகாப்பு, வேளாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் நடப்பாண்டில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது அடுத்த ஐந்தாண்டுகளில் 12 லட்சம் வேலைவாய்ப்புகளாக அதிகரிக்கும் என நாஸ்காம் நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. மென்பொருள், தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் நடப்பாண்டில் முதலீடு 16 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.