Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, November 26, 2019

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்க்கும்போது நீட் தேர்வுக்கு மாணவர்களை எப்படி தயார்படுத்த முடியும்? அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி

ஐந்து மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை அனைவரும் எதிர்க்கும்போது மாணவர்களை நீட் தேர்வுக்கு எப்படி தயார்படுத்த முடியும்? என அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பி உள்ளார். கோபி அருகே நம்பியூரில் வேளாண் அலுவலக கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே மாநில அரசின் கொள்கையாக உள்ளது.



அதன்படி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளது. வழக்கு முடிந்த பிறகுதான் இது குறித்து கருத்து கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார். நீட் தேர்வுக்கென 412 மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இருப்பினும், அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர்கூட அரசு மருத்துவக்கல்லூரியில் சேரவில்லையே என்று கேட்டபோது அமைச்சர் கூறியதாவது: 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கொண்டு வருவதை அனைவரும் எதிர்க்கும்போது நீட் தேர்வுக்கு மாணவர்களை எப்படி தயார்படுத்த முடியும்?.



8ம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பதால் மாணவர்களின் திறமையை கண்டறிய முடிவதில்லை. அதே நேரத்தில் பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் பயப்பட தேவை இல்லை. தற்போது மூன்றாண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோரிக்கை வைத்தால் மீண்டும் கால நீடிப்பு செய்யவும் முதல்வர் தயாராக உள்ளார்.