Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, November 2, 2019

வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற 50 அரசு டாக்டர்கள் பணி இடமாற்றம் தமிழக அரசு நடவடிக்கை

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக 4 ஆயிரத்து 683 டாக்டர்கள் நேற்று (நேற்றுமுன்தினம்) வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் இருந்தனர்.

மக்கள் மற்றும் நோயாளிகள் நலன் கருதி அரசு டாக்டர்கள் உடனடியாக வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தோம். அதனை ஏற்று 2,160 பேர் இன்று (நேற்று) பணிக்கு திரும்பி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். வருகை பதிவேட்டில் கையெழுத்திடுவோர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எங்களுக்கு செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.



மாலை 6 மணி நிலவரப்படி, வேலைநிறுத்தத்தில் இருப்பவர்கள் 2 ஆயிரத்து 523 பேர். கோவை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, மதுரை உள்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் யாரும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

விழுப்புரம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பணிக்கு திரும்பிவிட்டார்கள். இது தான் உண்மை நிலை. ஆனால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 17 ஆயிரம் டாக்டர்கள் போராட்டத்தில் இருக்கிறார்கள் என்று அவர்கள் பேட்டி தருகிறார்கள். அரசு மிகவும் தெளிவாக ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது.

ஏழை-எளிய மக்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை பாதிக்கப்படகூடாது என்பதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் உறுதியாக இருக்கிறார். எனவே அரசின் வேண்டுகோளை ஏற்று, மக்கள் மற்றும் நோயாளிகளின் நலனை கருதி பணிக்கு திரும்பிய 2,160 டாக்டர்களுக்கு என்னுடைய நன்றியை அரசு, மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பிலும், பொதுமக்கள், நோயாளிகள் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.



சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் செல்ல கூடிய நுழைவுவாயிலை அடைத்து, படிக்கட்டுகளில் டாக்டர்கள் அமர்ந்து கோஷம் எழுப்புகிறார்கள். அந்த படங்கள் என்னிடம் இருக்கிறது. அங்கு அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று சொல்வது ஏற்புடையது தானா?.

போராட்டம் களம் என்பது மருத்துவமனை வளாகம் அல்ல. அவர்களுடைய கருத்து, கோரிக்கையை சொல்லலாம். அவர்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது. இதே இடத்தில் (சென்னை தலைமை செயலகம்) தொடர்ந்து 12 மணி நேரம் நான் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன்.

எனவே நாங்கள் எந்த நேரத்திலும் டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம்.



2 ஆயிரத்து 523 டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும், நாங்கள் 50 பேருக்கு தான் பணிமாறுதல் கொடுத்து இருக்கிறோம். அரசியல் கட்சி தலைவர்கள் சொல்வது போன்று, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தண்டிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை. பணி பாதிக்கக்கூடாது என்பதற்காக வெறும் 50 டாக்டருக்கு மட்டும் பணி மாறுதல் வழங்கி, அந்த இடத்தில் புதிய டாக்டர்களை நியமிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம்.

டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்-அமைச்சரும் வேண்டுகோள் விடுத்துள்ளார். டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் தமிழக அரசு மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது.

எம்.பி.பி.எஸ். முடித்து தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து இரவு பணியிலும் ஈடுபடும் டாக்டர்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் இருக்கும். ஆனால் மக்கள் நல்வாழ்வுத்துறையில் எம்.பி.பி.எஸ். முடித்து பணிக்கு சேரும் டாக்டர்களுக்கு காலை 9 முதல் மாலை 5 மணி வரை தான் பணி.



அவர்களுக்கு எடுத்தவுடனேயே ரூ.80 ஆயிரத்து 247 சம்பளம். அதுமட்டும் இல்லாமல் விடுமுறைகள் உள்பட பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது. எம்.பி.பி.எஸ். அரசு டாக்டர்களுக்கு நாங்கள் மதிப்பெண்கள் கொடுத்து அவர்களுக்கு எம்.டி., எம்.எஸ்.(முதுகலை மருத்துவ படிப்பு) படிக்கும் வாய்ப்பை அரசாங்கமே ஏற்படுத்தி தருகிறது. அவர்கள் எம்.டி., எம்.எஸ். படிக்கும் 3 ஆண்டு காலத்தையும் பணி காலமாக கருதி அவர்களுக்கு அரசு முழுமையான சம்பளம் வழங்கி வருகிறது. இதனை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.



தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் முக்கியமான கோரிக்கை (டி.என்.ஜி.டி.) 4 பதவி உயர்வு, அடிப்படை ஊதிய உயர்வு ஆகியவை தான். அதனை பரிசீலித்து டாக்டர்களுக்கும், அரசுக்கும் இடையே ஒரு சாதகமான நிலைப்பாட்டை அரசு எடுப்போம் என்று உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த உறுதியை ஏற்று தான் 15 ஆயிரத்து 500 டாக்டர்களை கொண்ட தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு விட்டார்கள். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் 50 ஆண்டு கால பழமையான சங்கம்.



அவர்கள் முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை வைத்து, அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை கைவிட்டுள்ளனர். இவர்கள் அரசுக்கு வேண்டிய சங்கம் என்று சொல்வது தவறு. அவர்களையும் (தற்போது போராடும் சங்கம்) தான் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன். எனவே நாளை (இன்று) காலைக்குள் டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு திரும்பாத டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் போராட்டம் மூலம் அரசை நிர்ப்பந்திக்க கூடாது.