'பள்ளி மாணவ - மாணவியருக்கு அருங்காட்சியகங்களில் பயிற்சி'

''பள்ளி மாணவ - மாணவியருக்கு, அருங்காட்சியகங்களில், அரை நாள் பயிற்சி அளித்து, சரித்திர அறிவை வளர்க்க, அரசு முடிவெடுத்துள்ளது,'' என, பாரம்பரிய வார விழாவில், தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். மத்திய தொல்லியல் துறை, தமிழக தொல்லியல் துறையுடன் இணைந்து, உலக பாரம்பரிய வார விழாவை, மாமல்லபுரத்தில், நேற்று கொண்டாடியது.பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர், பாண்டியராஜன், தமிழக தொல்லியல் சின்னங்கள் கண்காட்சியை துவக்கி, பேசியதாவது:பழங்கால சின்னங்களை தோண்டி பார்ப்பது மட்டுமே, தொல்லியல் அல்ல. வரலாறு, கலாசார பண்பாடு, பொறியியல் என, பன்முக தன்மையும் உடையது;கலை, இசை, இலக்கியம் போன்றதையும் சார்ந்தது.நம் முன்னோர் விட்டுச் சென்றவை தான், நம் பெரிய சொத்து; விலைமதிப்பில்லாதது. கீழடி ஆய்வுகள், 2,580 ஆண்டுகளுக்கு முன், ஆடை, சாயமிடல் உள்ளிட்ட தொழில் நகராக விளங்கியதை உணர்த்தி உள்ளது.இதனால், பள்ளி மாணவ - மாணவியருக்கு, அருங்காட்சியகத்தில், அரைநாள் பயிற்சி அளித்து, சரித்திரம் அறிவை வளர்ப்பதற்காக, இது குறித்து வினாடி - வினா போட்டி நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.சரித்திரம், அரசியல், சமூகவியல், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பத்தை, அருங்காட்சியக பொருட்களுடன் ஒப்பிட்டு, அவர்களின் திறன் வளர்க்க, இத்தகைய ஏற்பாட்டைஅரசு, விரைவில் துவக்குகிறது.இவ்வாறு, அவர் கூறினார். பாரம்பரிய வார விழா துவக்க நாளை முன்னிட்டு, பயணியர், பாரம்பரிய சின்னங்களை, இலவசமாக கண்டுகளித்தனர்.