அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சிகை அலங்காரத்துக்கு கட்டுப்பாடு: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


நாமக்கல்: இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன், ஒழுக்கத்தையும், நல்வழியையும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க க(த)ண்டித்த ஆசிரியர்களைப் போல், தற்போதைய ஆசிரியர்கள் இல்லை. கால மாற்றத்தால் மாணவர்களை எதிர்கொள்ள ஆசிரியர்கள் சற்று தயக்கம் காட்டுகின்றனர். வகுப்பறையில் பல்வேறு அறிவுரைகள் வழங்கினாலும், அதன்வழியில் நடப்பது என்பது மாணவர்களுக்கு கசப்பாகவே தோன்றுகிறது.தமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் சுமார் 37 ஆயிரம் அரசுப் பள்ளிகளும், 8,300 அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 70 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதேபோல், உயர்கல்வித் துறையின் கீழ் சுமார் 280 அரசுக் கல்லுரி மற்றும் சுய நிதிக் கல்லுரிகளில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். நாகரிகம் என்ற பெயரில் மாணவர்கள், பல்வேறு வகையில் தங்களது முகத்தையும், தலைமுடியையும் அழகுப்படுத்திக் கொண்டு பள்ளி, கல்லூரிக்குள் வருவது அண்மைக் காலமாக அதிகரித்து விட்டது. முன்பெல்லாம் தலைமுடி அதிகம் இருந்தாலே, ஆசிரியர் அதனை முழுமையாக வெட்டிவிட்டு வந்தால்தான் வகுப்பறையில் இடம் உண்டு, இல்லையேல் வெளியே சென்று விடு என மாணவர்களை எச்சரிப்பர். அவர்களும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு பயந்து அந்த வார்த்தையை மதித்தனர்.இக் காலகட்டத்தில், திரைப்படங்களில் வரும் நடிகரைப் போல், தலைமுடியை மாற்றம் செய்து கொண்டு பள்ளி, கல்லூரிக்குரிய மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் சில மாணவர்கள் வருகின்றனர். இதனை ஆசிரியர்களும் கண்டும், காணாமலும் இருந்து விடுகின்றனர். கிராமப்புறங்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் இவ்வாறான சிகை அலங்கார மோகம் அதிகம் உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், தமிழகத்தில் குறிப்பிட்ட சில அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், சிகை அலங்காரக் கடைகளுக்கு சென்று வேண்டுகோள் விடுக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் நடைமுறையை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இவ்வாறான முயற்சியை அவர்கள் எடுத்துள்ளனர் எனலாம். அந்த பிரசுரத்தில், மாணவர்களுக்கு ஒழுக்கத்தை மேம்படுத்துவது ஆசிரியர்களை மட்டும் சார்ந்ததல்ல. இதில், நம் சமூகத்திற்கும் தொடர்பு உள்ளது என்பது மறக்க முடியாத உண்மை.இதில் சிகை அலங்கார(முடி திருத்துவோர்) நிபுணர்களாகிய நீங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறீர்கள். உங்களின் செயல்பாடே மாணவர்களின் அகத்தையும், புறத்தையும் அழகுறச் செய்கிறது. தங்களிடம் சிகை அலங்காரம் செய்ய வரும் பள்ளி மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல், தலைமுடியில் கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒன் ûஸடு கட்டிங், ஸ்பைக் கட்டிங் போன்றவற்றை தவிர்த்து, பள்ளிச் சூழல், வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றாற்போல், அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்து கொடுக்க முன்வாருங்கள். இது மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த உதவும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை நேரடியாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் அனுப்பி வருகின்றனர். ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானதாகத் தோன்றினாலும், தினசரி வருமானத்தை நம்பியுள்ள நாங்கள் வாடிக்கையாளர்கள் கேட்கும் வகையில் செயல்பட்டால் தானே எங்களது தொழில் மேம்படும்.இதனை அரசு தான் ஒரு சட்டமாகக் கொண்டு வந்து, பள்ளி, கல்லூரிகளில் தேவையற்ற வகையில், ஒழுக்கத்தை மீறிய சிகை அலங்காரத்துடன் வரக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் சிகை அலங்கார நிபுணர்கள்.
இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆ.ராமு கூறியது; மாணவர்களை திட்டக் கூடாது, மனம் புண்படும்படி பேசக் கூடாது என அரசு அறிவுறுத்துகிறது. ஒரு மாணவர் பள்ளிக்கு எவ்வாறெல்லாம் வரக் கூடாது என்பதற்கான 18 விதிகளை பள்ளிக் கல்வித் துறை வகுத்துள்ளது.
ஆரம்ப காலத்தில் தலைமுடி அதிகம் இருந்தால், மாணவர்களை ஆசிரியர்கள் எச்சரிப்பர். தற்போது அந்த நிலையில்லை.தலைமுடி தூக்கிக் கொண்டு இருப்பதுபோலும், ஆங்காங்கே கோடுகளை கிழித்தும், பிளேடு போன்றும் பலவித சிகை அலங்காரத்துடன் வகுப்பறைக்குள் வருகின்றனர். அவ்வாறு பள்ளிக்கு வரக்கூடாது என எச்சரித்தாலும், மாணவர்கள் கேட்பதில்லை. இதுமட்டுமின்றி, கைகளில் பலவித கயிறுகள், இரும்பு கம்பிகள், கழுத்தில் சங்கிலி, நடிகர்கள் பெயர் கொண்ட பட்டை போன்றவற்றை அணிந்து வருகின்றனர். மடிக்கணினியில் சினிமா பாடல்களை ஏற்றி வந்து வகுப்பறையில் வைத்துக் கேட்கும் சூழல் எல்லாம் உள்ளது. ஆசிரியர்களைக் காட்டிலும் அரசு தான் முழுமூச்சாக இதை தடுப்பதற்கான ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையெனில், பள்ளிகளின் புனிதத்தன்மை முற்றிலும் கெட்டுப்போய் விடும். விரைவில் பள்ளிக்கான புதிய கட்டுப்பாடுகளை விதித்து, அது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பதுதான் ஆசிரியர்கள் மட்டுமின்றி, பெற்றோரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கும் என்றார்.
- எம்.மாரியப்பன்