Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 14, 2019

வில்வம் துளசியை பார்த்தாலே புண்ணியம் - அமாவாசை பவுர்ணமியில் பறிக்க கூடாது


மதுரை: வில்வம் சிவன் கைகளில் ஏந்தியுள்ள திரிசூலத்தின் அடையாளம். அதன் மூன்று கூர்மைகளும் இச்சா சக்தி ஞான சக்தி கிரியாசக்தி எனக் கருதப்படுகிறது. துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், அடியில் சிவனும், மத்தியில் திருமாலும் வசிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதைக்காட்டிலும் துளசியாலும் வில்வத்தினாலும் அர்ச்சனை செய்தாலே விஷ்ணுவும் சிவனும் மகிழ்ச்சியடைகின்றனர். வில்வமும் துளசியும் தெய்வீக அம்சம் கொண்டவை இவற்றை எல்லா நாட்களிலும் பறித்து விட முடியாது பறிக்கவும் கூடாது.




சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே வில்வ இலையால் சிவனை பூஜிப்பவர்களுக்கு இறுதி காலத்தில் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்.

மனிதன் நிமிர்ந்து நிற்கக் காரணம் முதுகுத்தண்டு. வில்வமரம் அதிக வளைவுகள் இல்லாமல் நிமிர்ந்திருக்கும் தன்மை உடையது. இதனால் வில்வம் கொண்டு சிவனை வழிபடுபவர்கள் எதற்கும் அஞ்சாமல், நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ் சோம் என்ற நாவுக்கரசரின் சொல்லுக்கேற்ப எமனையே எதிர்த்து நிற்கலாம் என்பது ஐதீகம். மேலும் வில்வ இலைகள் முப்பிரிவானவை. ஒரு காம்பில் மூன்று இலைகள் இருக்கும். இது சிவனின் மூன்று கண்களைக் குறிக்கும்.தேவலோக மரம் வில்வ மரம்




தேவலோகத்தைச் சேர்ந்த பஞ்ச தருக்களில் ஐந்து மரங்களில் மகாவில்வமும் ஒன்று ஒரு முறை மகா வில்வ மரத்தை பிரதஷினம் வந்தால் கைலாய மலை போய் வந்த பலன் கிடைக்கும். வில்வ இலைகளைப் பறிக்கவும் சில நியதிகளும் உண்டு. சூரிய உதயத்துக்கு முன் பறிக்கவேண்டும். திங்கட்கிழமை சதுர்த்தி அஷ்டமி நவமி சதுர்த்தசி பௌர்ணமி ஆகிய திதிகளில் வில்வம் பறிக்கக்கூடாது. வில்வ இலைகளைப் பின்னப்படுத்தாமல் அதாவது மூன்று இதழ்களும் முழுமையாக இருக்கும்படியாகப் பறிக்கவேண்டும்.


மகாவில்வம்

வில்வத்தில் 12 வகைகள் உள்ளன. அவற்றில் மகா வில்வம்,காசி வில்வம்,ஏக வில்வம் என்னும் மூன்றும் முக்கியமானவை. இதில் மகாவில்வத்தை கோவில்,ஆசிரமம், ஜீவ சமாதி போன்ற இடங்களில் மட்டுமே வளர்க்க வேண்டும். மகா வில்வம் வித்தியாசமானது. 5,7,9,11,12,இதழ்கள் கொண்டதாக திகழ்கிறது.





சிதம்பர ரகசியம்

மகாவில்வத்தில் இலைகள் ஒரு காம்பில் ஏழு,ஒன்பது,பனிரெண்டாக இருக்கும். சிவ பெருமானை மகா வில்வ தளத்தினால் அர்சிப்பது மிகவும் விசேசமானது.பன்மடங்காய் பலன்தரும் அதனால் ஆலயங்களில் மட்டுமே அபூர்வமாக வளர்க்கப்படும். மகா வில்வமானது நடராஜ் பெருமான் நாட்டியத்தில் உத்திர நட்சத்திர நாளில் அபிஜத் முகூர்த்தம்,பிரம்ம முகூர்த்தம் போன்ற பன்னிரு முகூர்த்தங்களில் ஒவ்வொரு வில்வ இலையாக உண்டானது. இதன் ஆதி மூலத்தை சிதம்பரத்தில் சிதம்பர ரகசியத்தின் ஒரு அங்கமாய் உள்ள சுவர்ண வில்வ மாலையாக தரிசிக்கலாம். மகா வில்வத்தின் இலைகளை அதிகமாகப் பறித்தல் கூடாது. மகா வில்வ மரத்தை அனைவரும் தரிசிக்கலாம். ஆலயங்களில் மக்கள் நன்மைக்காக நடத்தப் பெறும் பூஜைகளிலும் யாகத்திலும் பயன்படுத்த வேண்டும்.





வில்வத்தை எப்போது பறிக்கலாம்

வில்வ இலைக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. ஒரு தடவை உபயோகித்த வில்வ இலையை, தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து விட்டு மீண்டும் பூஜைக்கு பயன்படுத்தலாம். அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வில்வ இலையை பறிக்கக்கூடாது. வில்வத்தை மூன்று இலைகளாகக் கொண்ட தளமாகத்தான் பறித்து பூஜிக்க வேண்டும்.


மும்மூர்த்திகளும் வசிக்கும் துளசி

துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், அடியில் சிவனும், மத்தியில் திருமாலும் வசிக்கிறார்கள். மேலும் 12 ஆதித்யர்கள், 11 ருத்திரர்கள், 8 வசுக்கள் பீஷ்மருக்கு முன்னதாக பிறந்த கங்கா புத்திரர்கள், 2 அசுவினி தேவர்களும் (தேவலோக மருத்துவர்கள்) வாசம் செய்வதாக ஐதீகம். துளசி இலை போட்ட நீர் கங்கை நதிக்கு சமமானது என்பதால் பெருமாள் வழிபாட்டில் துளசி முக்கிய இடம் பெறுகிறது. செவ்வாய், வெள்ளி, மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, துவாதசி, இரவு, நேரங்களில் துளசியை பறிக்கக் கூடாது.


விஷ்ணு துளசி

யார் துளசி தேவியைப் பற்றி அறிகிறானோ, அவனது சகல ஜன்ம பாபங்களும் விடுபட்டு, ஸ்ரீ ராதா கிருஷ்ணனை அடைகிறான். துளசிச்செடி அடியில் உள்ள மண்ணை கொஞ்சம் குழைத்து தனது உடலில் சாற்றிக்கொண்டவன் 100 கிருஷ்ண பூஜைகளை அன்று செய்த பலன் பெறுவான். துளசியை ஆராதித்து கிருஷ்ணனுக்கு அர்ச்சிப்பவன், எல்லா புஷ்பங்களை அர்ச்சிப்பதன் பலன் பெறுவான். இறந்தபிறகு கிருஷ்ணனையே அடைகிறான்.


துளசி செடியால் பரிசுத்தம்




துளசி செடி எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டில் வசிப்பவர்களில் கிருஷ்ணனும் ஒருவன். யாராவது வழியில் நடந்து செல்லும் போது எங்காவது ஒரு துளசி தோட்டம், நந்தவனத்தை கடந்து வணங்கி போகிறானோ, அவன் சர்வ பாப, தோஷங்கள் நீங்கப் பெறுவான். காற்றில் எங்கிருந்தாவது துளசி வாசனை வந்து அதை நுகர்வதாலும் கூட ஒருவன் பரிசுத்தமாகிறான்.


தானம் செய்த பலன்கள்




துளசி கட்டையை உபயோகித்து கிருஷ்ணனுக்கு செய்யும் தூப ஆராதனை, 100 அக்னி ஹோத்ர பலனையும், 100 கோ தான பலனும் கொடுக்கும்.
கிருஷ்ணனுக்கு நைவேத்யம் பண்ணும் உணவு, துளசி கட்டை கலந்த அக்னியில் தயாரிக்கப் பட்டிருந்தால் மேருமலை அளவு தானியங்களை தானம் செய்த பலன் தரும்.


மோட்சம் கிடைக்கும்




ஒரு சிறு துளசி குச்சியால் ஏற்றிய தீபம், பல லட்சம் தீபங்களை கிருஷ்ணனுக்கு ஏற்றிய பலன் தரும். இப்படி விளக்கேற்றியவனைப் போல கிருஷ்ணனுக்கு பிடித்தவன் வேறு யாருமில்லை. யாருடைய உடல் துளசி கட்டையோடு தகனம் செய்யப்படுகிறதோ அவனுக்கு உடலோடு அவன் பாபங்களும் எரிந்துவிடும் எவன் அந்திம காலத்தில் விஷ்ணுவின் நாமத்தை சொல்கிறானோ, துளசி கட்டையை தொடுகிறானோ , அவன் மோக்ஷம் எய்துவான். கிருஷ்ணனே அவனை எதிர் கொண்டு அவன் கையைப் பிடித்து தன்னோடு அழைத்து செல்வார் .