Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 29, 2019

பாதுகாப்பற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம்


சென்னை: பாதுகாப்பற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் வினியோகிக்கப்படும் பாலில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, நஞ்சு அதிகமிருப்பதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம்(FSSAI), சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, பாதுகாப்பற்ற உணவுகள் தமிழகத்தில் தான் அதிகம் விற்படுவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.



இதுகுறித்து FSSAI வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 2018 - 19 ஆண்டில், ஆய்வுக்கு எடுத்த உணவு பொருட்களில் 45.3 சதவீத உணவுகள், தரம் குறைவாகவும், 12.7 சதவீத உணவுகள் பாதுகாப்பற்றதாகவும் இருந்தது. தமிழகத்தில் சோதனை செய்யப்பட்ட, 5,730 உணவு மாதிரிகளில், 728 உணவுகளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. தமிழகத்தில் 2018 - 19 ஆண்டில், 666 குற்றவியல் நடவடிக்கைகளும், 1,718 சிவில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ரூ.5.01 கோடி அபராதம் தமிழகத்தில் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.அதே சமயம், இந்தியா முழுவதும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 1,06,459 உணவு மாதிரிகளில், 30,415 உணவுகளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது. 2,813 குற்றவியல் நடவடிக்கைகளும், 18,550 சிவில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, ரூ.32.57 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



அதிகம் கலப்படம் செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழகம்(12.7%) முதலிடமும், அசாம்(8.9%) 2வது இடமும், ஜார்கண்ட்(8.8%) 3வது இடமும் பிடித்துள்ளன. 4வது, 5வது இடங்கள் முறையே, மேற்கு வங்கம்(7.6%), ஒடிசா(6.7%) இடம்பெற்றுள்ளன.தமிழகத்தில், உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள், தர சோதனையில் தோல்வி அடைந்ததற்கு, விவசாயிகள் ரசாயனங்கள் மற்றும் அசுத்தமான உரங்களை பயன்படுத்துவதால் தான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.