மாணவ விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் தயாரிக்கலாம்


பெங்களூரு : ''என்.டி.ஆர்.எப். எனப்படும்தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் பொன் விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்காக தேசிய செயற்கைக்கோள் வடிவமைப்பு போட்டி நடத்தப்படும்'' என அம்மன்றத்தின் தலைவரான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அறிவித்துள்ளார்.இது குறித்து மயில்சாமி அண்ணாதுரை வெளியிட்ட அறிக்கை:தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கான செயற்கைக்கோள் வடிவமைப்பு போட்டி நடத்தப்படுகிறது.தேசிய அளவிலான இப்போட்டியில் எட்டாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம். ஒரு குழுவில் அதிகபட்சம் 5 மாணவ - மாணவியர் இருக்கலாம். மாணவர்கள் 50 கிராம் எடையில் தங்கள் யோசனைகள் மூலம் செயற்கைகோளின் 'பே லோட்' எனப்படும் தாங்கு சுமையை வடிவமைக்க வேண்டும்.மாணவ குழுவினரின் 12 புதுமையான யோசனைகள் தேர்ந்தெடுக்கப்படும். இம்மாணவர்களுக்கு செயற்கைக்கோள் வடிவமைப்பு தொடர்பான வழிகாட்டுதல் வழங்கப்படும்.தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ குழுவினரின் 12 செயற்கைக்கோள்கள் சென்னையிலிருந்து ஏவப்படும். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் தங்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் பங்கேற்கலாம். செயற்கைக்கோள்கள் ஏறக்குறைய 20 கி.மீ.
உயரத்துக்கு ஹீலியம் உதவியால் ஏவப்படும். ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் பத்திரமாக தரையிறக்கப்படும். இவைகள் மாணவ குழுவினரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்.மாணவர்கள் என்.டி.ஆர்.எப். நிறுவனத்தின் www.ndrf.res.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களையும் செயற்கைக்கோளின் தாங்கு சுமை யோசனைகளையும் பதிவு செய்யவேண்டும். போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் வரும் 25ம் தேதிக்குள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.தேர்ந்தெடுக்கப்படும் மாணவ குழுவினர் தங்கள் சொந்த செலவில் வந்து செல்ல வேண்டும். முடிவுகள் டிசம்பர் 15 ல் என்.டி.ஆர்.எப். இணையதளத்தில் அறிவிக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 19 ல் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்.போட்டி குறித்த சந்தேகங்களுக்கு ndrf85@gmail.com என்ற மின்னஞ்சலிலும் 080 - 2226 4336 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.