அன்னவாசல் அருகே வேங்கைவயல் அரசுப்பள்ளியில் முப்பெரும் விழா.

அன்னவாசல்,நவ.27:புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உணவுத் திருவிழா, மயில்சாமி அண்ணாதுரை துளிர் இல்லம் துவக்கவிழா மற்றும் துளிர் வினாடி வினா போட்டியில் மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியர் கோ.கலைச்செல்வி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாராக காவேரி நகர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், காவேரி நகர் குறுவளமைய தலைமையிடத்து தலைமை ஆசிரியருமான ஏ.வின்சென்ட் கலந்துகொண்டு உணவுத்திருவிழாவில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவர்கள் பா.கோமதி, அ.தனசேகர், ம.பத்மஸ்ரீ ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய புதுக்கோட்டை மாவட்ட அளவிலான துளிர் வினாடி வினா போட்டியில் தொடக்கநிலை 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்ற இப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
விழாவில் சந்திராயன்-1 திட்டத்தில் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆய்வை உறுதிப்படுத்திய தமிழ் வழியில் பயின்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் பெயரில் துளிர் இல்லம் துவங்கப்பட்டது இவற்றின் தலைவராக நான்காம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அ.தனசேகர், செயலாளராக கா.அஜய், மற்றும் பொருளாளராக ம.பத்மஸ்ரீ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வானியல் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் சூரிய கண்ணாடிகளை கொண்டு சூரியனை உற்று நோக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் டிசம்பர் 26 ஆம் தேதி நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை எவ்வாறு காண்பது என்பதற்கான செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆசிரியை சி.ரேவதி வரவேற்றுப் பேசினார்.பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவி ச.மலர்விழி நன்றி கூறினார்
விழாவில் ஆசிரிய பயிற்றுநர் மலர்விழி மற்றும் வேங்கைவயல் பள்ளி மாணவர்கள் மற்றும் ஏராளமான பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.