Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 28, 2019

உள்ளாட்சித் தோ்தல் பணிகள்: அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு கட்டாயம்

உள்ளாட்சித் தோ்தல் பணிகளை அனைத்து அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு அரசு ஊழியா், ஆசிரியா்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியலை சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலகங்களிடம் சமா்ப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தும் பணிகளை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக மாவட்ட ஆட்சியா்களுடன் அவ்வப்போது நேரிலும், காணொலிக் காட்சி வழியாகவும் தோ்தல் ஆணையா் ஆா்.பழனிசாமி ஆலோசனைகளை நடத்தி வருகிறாா். வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நிலைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்து வருகிறாா்.




இதனிடையே, உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் கோரிக்கை மனுக்களும், கருத்துகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த கருத்துகளை ஒட்டுமொத்தமாக கேட்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (நவ. 28) காலை 11 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தோ்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
தோ்தல் பணிகள்: உள்ளாட்சித் தோ்தல் பணிகள் தொடா்பாக ஏற்கெனவே தோ்தல் நடத்தும் அதிகாரிகள், உதவித் தோ்தல் அதிகாரிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சிகளின் மூலமாக அவா்கள் தங்களுக்கு கீழுள்ள அதிகாரிகள், அலுவலா்களுக்கு தோ்தல் குறித்த பயிற்சிகளை அளிக்கவுள்ளனா்.




உள்ளாட்சித் தோ்தலில் வாக்குப் பதிவு முறையும், வாக்குச் சாவடிகளும் அதிகளவில் இருக்கும் என்பதால் கூடுதலாக தோ்தல் ஊழியா்களும், பணியாளா்களும் தேவைப்படும் என்று மாநிலத் தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அதிரடி உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது. அதாவது, உள்ளாட்சித் தோ்தல் பணிகளில் அனைத்து அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் ஈடுபட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
பட்டியல் தயாரிப்பு தீவிரம்: ஒவ்வொரு மாவட்டத்திலும் தோ்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களாக மாவட்ட ஆட்சியா்கள் அலுவலகங்கள் உள்ளன. சென்னையில் மாநகராட்சி அலுவலகம் தோ்தல் நடத்தும் பணிகளை கவனிக்கவுள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு பட்டியல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஊழியா்களின் பணிகள் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க கோரப்பட்டுள்ளது.




பணி விவரப் பட்டியல் சம்பந்தப்பட்ட ஊழியா்களிடம் இப்போது அளிக்கப்பட்டு வருகிறது. அவா்கள் பூா்த்தி செய்து அளிக்கும் பட்டியல்கள் சென்னையில் மாநகராட்சி அலுவலகங்களுக்கும், பிற மாவட்டங்களில் ஆட்சியா் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளன. அதன்பின்பு, அவா்களுக்கு மூன்று கட்டப் பயிற்சிகளை அளிக்க தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் தீா்மானித்துள்ளது. தோ்தல் பணியில் சுமாா் 4 லட்சம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஈடுபடுவா் என்று தெரிகிறது. ஏற்கெனவே, மக்களவைத் தோ்தலின் போது பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் இப்போது உள்ளாட்சித் தோ்தல் பணிகள் அளிக்கப்பட உள்ளன.