பெண்களுக்கான பிரத்யேக நூலகம் ஒன்றைத் தனியாளாக அமைத்திருக்கும் அரசுப்பள்ளி ஆசிரியை


பெண்களுக்கான பிரத்யேக நூலகம் ஒன்றைத் தனியாளாக அமைத்திருக்கிறார் சிதம்பரம் அருகேயுள்ள தில்லைநாயகபுரத்தைச் சேர்ந்த சசிகலா. அரசுப் பள்ளி ஆசிரியையான இவர், தன் ஊர்ப் பெண்களின் கல்வி முன்னேற்றத்துக்காகப் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார். சசிகலாவின் சமீபத்திய சேவை முயற்சிதான், புதிய நூலகம் அமைத்திருப்பது.

``நான் கிராமப்புறத்துலதான் வளர்ந்தேன்.

என் பள்ளிப் பருவத்துல சுதந்திரமா வெளியிடங்களுக்கும், நூலகத்துக்கும் போக வீட்டுல அனுமதிக்கமாட்டாங்க. அதுவே, என் அறிவுத் தேடலுக்குப் பெரிய தடையாச்சு. அதனால, இப்போவரை எனக்குள் வருத்தமுண்டு. எனக்கு ஏற்பட்ட நிலைபோல, எங்க ஊர்ப் பெண்கள் பலரும் நூலகம் உட்பட வெளியிடங்களுக்குப் போக இன்றளவும் அனுமதியில்லை.வீட்டுக்குள்ளயே இருந்தால், பெண்களின் முன்னேற்றம் உறுதியாகாது. இது, பல குடும்பத் தலைவர்களுக்குப் புரியிறதேயில்லை. இப்போதான் எங்க ஊர்ல பல பெண் பிள்ளைகள் கல்லூரியில் படிக்கிற அளவுக்கு முன்னேறியிருக்காங்க. பாடப் புத்தகங்கள் மட்டுமே அறிவு வளர்ச்சிக்கு உதவாது. போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வது உட்பட கல்வி வளர்ச்சிக்குப் பெண்கள் நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டியது அவசியம். ஆனா, அதற்கு அவங்க குடும்பத்தினரின் ஆதரவு பெரிசா இருப்பதில்லை.

சசிகலாபாடப் புத்தகங்கள் மட்டுமே அறிவு வளர்ச்சிக்கு உதவாது. போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வது உட்பட கல்வி வளர்ச்சிக்குப் பெண்கள் நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டியது அவசியம்.
இந்த நிலையை மாத்த எங்க ஊர்லயே நூலகம் ஒன்றை அமைக்கணும்னு நினைச்சேன். இதற்காக கடந்த ரெண்டு வருஷமா ஊர்ப் பெண்களிடம் பேசி அவங்க ஒத்துழைப்புடன் பல்வேறு முயற்சிகளை எடுத்தேன். நேற்று முன்தினம் புதிய நூலகத்தை அமைச்சேன்" என்கிறார் சசிகலா. பொது அறிவு, போட்டித்தேர்வு, பாடப் புத்தகங்கள், தலைவர்களின் வரலாறு உட்பட 1,500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் நூலகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.``இந்த நூலகத்துக்காக தனியா ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கேன். இந்த நூலகம் முழுக்கவே பெண்களுக்கானது. இங்க ஆண்களுக்கு அனுமதியில்லை. அதனாலயும், எங்க ஊர்லயே இருக்கிறதாலயும் பல பெண்கள் நூலகத்துக்கு வந்து பயனடையிறாங்க. அதற்குப் பல குடும்பத்தினரும் ஆதரிக்கிறாங்க.

இந்த நூலகத்தைக் கல்லூரி மாணவி ஒருவர் பகுதிநேரமா பார்த்துக்கிறாங்க. விரைவில் முழுநேரமா ஒரு பராமரிப்பாளரை நியமிக்கும் எண்ணம் இருக்கு. இன்னும் நிறைய புத்தகங்களை வாங்கி வைக்கணும். புத்தக வாசிப்பால் பெண்களின் முன்னேற்றம் அதிகரிக்கும்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் சசிகலா.