Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 14, 2019

அரசுப் பள்ளி மாணவர்களின் அரிய கண்டுபிடிப்பு- குடியரசுத் தலைவரை சந்திக்க அழைப்பு


சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள பிசிகேஜி அரசு மேனிலைப் பள்ளி மாணவர்கள் பயோமெட்ரிக் வாக்குப்பதிவு எந்திரம் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர், இதனையடுத்து குழந்தைகள் தினத்தில் இவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திக்கவுள்ளனர்.




தற்போதைய ஈவிஎம் வாக்கு எந்திரத்தின் மீது அரசியல் கட்சிகளுக்கு நாளுக்குநாள் சந்தேகம் வலுத்து வரும் நிலையிலும் தேர்தல்களின் போது ஈவிஎம் வாக்கு எந்திர முறைகேடு, கோளாறுகளினால் வாக்குப்பதிவு தடைபடுவதும், அரசியல் கட்சிகள் கொந்தளிப்பதும் நடந்து வருகிறது, இதனால் மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கே செல்ல வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் சென்னை, கோடம்ப்பாக்கத்தில் உள்ள அரசு மேனிலைப்பள்ளி மாணவர்களின் கூட்டு முயற்சியில் புதிய பயோ மெட்ரிக் வாக்குப் பதிவு எந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தைகள் தினத்தன்று புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இந்தப் பள்ளி மாணவர்கள் சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.




இந்தக் கண்டுபிடிப்புக் குறித்து 10ம் வகுப்பு மாணவர் பிரதீப் குமார் கூறும்போது, “நம் நாட்டில் மக்கள் தொகை அதிகமிருந்தும், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது வாக்களிப்போர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நாங்கள் வடிவமைத்த இந்த பயோமெட்ரிக் வாக்குப்பதிவு எந்திரத்தில் கைரேகை அல்லது கண்விழித்திரை ஸ்கேன் மட்டுமே போதுமானது. இந்தத் தரவைக் கொடுத்து விட்டால் வாக்காளரின் ஆதார் விவரங்களை அது தானே எடுத்துக் கொடுத்து விடும். இதனடிப்படையில் அவர் தொகுதி வேட்பாளர் பட்டியல் காட்டப்படும” என்றார்.
பிரதீப் குமார், 12ம் வகுப்புப் படிக்கும் எம்.வி.ஜெபின், என்.சுதர்ஷன், சுஷில் ராஜ் சிங், ஏ.விஷால், ஆகியோர் இந்த புதிய வாக்கு எந்திரத்தை வடிவமைத்த மாணவர்களாவர்.




5 பேர் கொண்ட இந்த மாணவர் குழுவிலிருந்து சுதர்சன், சுஷில், விஷால் ஏற்கெனவே புதுடெல்லி பறந்து விட்டனர், இவர்கள் வியாழனன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்குக் காட்டப்படுவதற்காக நாடு முழுதும் தேர்வு செய்யப்பட்ட 200 மாணவர் திட்டங்களில் கோடம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் திட்டமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது 8 டீம்களில் இந்தப் பள்ளி டீமும் ஒன்று. இந்த பயோமெட்ரிக் வாக்கு இயந்திரத்தின் இன்னொரு புதுமை என்னவெனில் வாக்காளர் குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்குத்தான் சென்று வாக்களிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.



ஏனெனில் எந்த ஒருவரின் பயோமெட்ரிக் விவரங்களும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பதால் எந்த இயந்திரத்தின் மூலமும் வாக்குப்பதிவு மேற்கொள்ளலாம் என்கின்றனர் இந்த மாணவர்கள். அடுத்தக் கட்டம் என்னவென்பதை விவரித்த இந்த மாணவர்கள், “அடுத்தக் கட்டமாக மென்பொருள் ஒன்றை உருவாக்கி ஏடிம் இயந்திரங்கள் மூலம் மக்கள் தங்கள் பயோமெட்ரிக் பதிவு முறையிலோ, கண்விழித்திரைப் பதிவு முறையிலோ வாக்களிக்குமாறு செய்வதாகும். பயோமெட்ரிக் சரிபார்ப்பு இருப்பதால் கள்ள வோட்டுக்கள் போட முடியாது” என்றனர்.



பள்ளியில் பணியாற்றும் கணித ஆசிரியை கே.விஜயலட்சுமி கூறும்போது, லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் என்பதுடன் நாங்கள் சேர்ந்து பணியாற்றி வருகிறோம். வகுப்பறைப் பாடங்களையும் தாண்டி மாணவர்கள் புதுமைக் கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்தும் இந்தத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். பள்ளியின் இந்த புதிய திட்டங்களை அடல் இன்னொவேஷன் மிஷன் அங்கீகரித்து வருகிறது, என்றார், இவரும் அறிவியல் ஆசிரியருமான வசந்தி தேவப்பிரியா என்பவரும் மாணவர்கள் இந்தப் புதிய வாக்கு இயந்திரத்தை வடிவமைப்பதில் உதவி புரிந்தனர்.