பெற்றோருடன் அரசுப் பள்ளியில் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடிய மாணவர்கள்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெற்றோர் முன்னிலையில் அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை மாணவ மாணவியர் வியாழக்கிழமை கொண்டாடினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது.

பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கா.மாரீஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொ.காளீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியை தங்கம் வரவேற்றார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவ மாணவியர் பெற்றோருடன் இணைந்து குழந்தைகள் தின விழாவை கேக் வெட்டி தொடங்கி வைத்தனர்.

மாணவ மாணவியர் ஆங்கிலம் மற்றும் தமிழிலில் குழந்தைகள் தின விழாவின் சிறப்புகள் மற்றும் ஜவஹர்லால் நேரு குறித்து பல்வேறு வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

பின்னர் மாணவர்களுக்கு தலைமையாசிரியர் சொந்த செலவில் வாங்கிக் கொடுத்த புத்தாடைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும் கலை நிகழ்ச்சி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி பொ.காளீஸ்வரி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கா.மாரீஸ்வரி ஆகியோர் வழங்கி சிறப்புரையாற்றினர்.
பின்னர் பெற்றோர் தினமும் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை மொபைல் போன் மற்றும் தொலைக்காட்சியை அணைத்து வைத்துவிட்டு, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிப்போம் என உறுதிமொழியேற்றனர்.

நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெற்றோர் க.மகேஸ்வரி நன்றி கூறினார்.