எடை குறைவான குழந்தைகளுக்கு ஊத்தப்பம், முளைகட்டிய பயறு: ஆரோக்கிய உணவு பட்டியலை வெளியிட்டது யுனிசெப்


புதுடெல்லி: எடை குறைவான சிறுவர்களுக்கு ஊத்தப்பம், முளைகட்டிய பயறு வகைகளை தர வேண்டும் என யுனெஸ்கோ வெளியிட்டுள்ள ஆரோக்கிய உணவு பட்டியல் புத்தகத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரிவான தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பு சார்பில் ஊட்டச்சத்து தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் 2016-2018ம் ஆண்டில் 5 வயதுக்குட்பட்ட 35 சதவீதம் குழந்தைகள் வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.மேலும், 17 சதவீதம் பேர் ஆரோக்கியமின்றியும், 33 சதவீதம் குழந்தைகள் எடை குறைபாட்டுடனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 40 சதவீதம் இளம்பெண்கள், 18 சதவீதம் வளர் இளம் சிறுவர்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி பருவ குழந்தைகள் மற்றும் வளர்இளம் பருவத்தினரை பாதிக்கும் சர்க்கரை நோய் போன்ற நோய் அச்சுறுத்தல்களை உருவாக்கும், அதிக எடை மற்றும் உடல் பருமனும் குழந்தை பருவத்திலேயே தொடங்கி விடுகிறது.குழந்தைகளின் எடை குறைபாடு மற்றும் அதிக உடல் பருமன் பிரச்னையை தவிர்ப்பதற்கான ஆரோக்கியமான உணவுகள் எவை, அதற்கான செலவுகள் உள்ளிட்ட விவரங்களை பட்டியலிட்டு யுனிசெப் அமைப்பு புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 28 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் புதிய உணவுகளை தயாரிக்கும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. 20 செலவில் ஊட்டசத்து மிகுந்த உணவுகளை குழந்தைகளுக்கு வழங்க முடியும் என இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எடை குறைபாடு பிரச்னையை சரி செய்வதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும், ஊத்தப்பம், உருளை கிழங்கு பரோட்டா, பன்னீர் காதி ரோல் மற்றும் சாகோ கட்லெட் உள்ளிட்ட உணவுகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அதே நேரத்தில் உடல் எடை அதிகமுள்ள குழந்தைகளுக்கு முளைகட்டிய பயறு, பரோட்டா, காய்கறி உப்புமா, அவல் போன்றவற்றை யுனிசெப் பரிந்துரைத்துள்ளது. இவை தவிர, கலோரி நிறைந்த உணவு பொருட்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்சத்து, இரும்பு சத்து, விட்டமின் சி மற்றும் கால்சியம் நிறைந்த உணவு பொருட்கள் தயாரிப்பு முறையும் யுனிசெப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.