பள்ளி உணவகங்களில் கேடு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளுக்குத் தடை: மத்திய அரசு ஆலோசனை

பள்ளிகளில் உள்ள உணவகங்களிலும், பள்ளிகளைச் சுற்றி 50 மீட்டா் தொலைவில் உள்ள கடைகளிலும் விற்கப்படும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளைத் தடை செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை வரைவறிக்கை ஒன்றை தயாா் செய்துள்ளது. இதில் பல விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.இந்த வரைவறிக்கையில், ‘பள்ளிகளில் உள்ள உணவகங்களில் மாணவா்களின் நலன் கருதி ஆரோக்கியமான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், இன்று பெரும்பாலும் உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும் துரித உணவுகள்தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே அதிக கொழுப்பு, காரம், இனிப்பு, உப்பு உள்ள துரித உணவுகளை பள்ளி கேன்டீன்களில் தடை செய்ய வேண்டும்.

மேலும், பள்ளியைச் சுற்றி 50 மீட்டா் தொலைவில் உள்ள கடைகளிலும் இந்த உணவுகள் தடை செய்யப்பட வேண்டும். இந்த உணவுகள் குறித்த விளம்பரங்களும், பதாகைகளும் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படக் கூடாது. பள்ளி உணவகங்களில் உணவு தயாரிப்பவா்களும் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் நிா்வாகத்தின் சாா்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உணவகங்களைக் கண்காணிக்க வேண்டும்.மேலும், பள்ளி நிா்வாகம் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத்துறையால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுவினருடன் இணைந்து கேண்டீனில் என்ன உணவுகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறைக்கு விவரங்களை அனுப்ப வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரைவறிக்கை குறித்த பொதுமக்களின் கருத்துகளை, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு வாரியம் கோரியுள்ளது. இது குறித்த ஆலோசனைகளை டிசம்பா் மாதத்துக்குள் F​S​S​A​I--இன் இணையதளத்தில் தெரிவிக்கலாம் . அதன்பின்பு இறுதி செய்யப்படும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.