"தண்ணீ குடிச்சா கண்காணியுங்க" ஆசிரியருக்கு புது உத்தரவு .!!


பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை கண்காணிக்கவும், அதன் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறவும் ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-குழந்தைகள் தின விழாவின் போது மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த அவகாசம் அளிக்கப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

எனவே காலை, மாலை சிறு இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களில் மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த அறிவுரை வழங்கவும், மேற்பார்வையிடவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

தண்ணீர் அருந்துவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து அறியாமல் இருப்பதன் காரணமாகவே பெரும்பாலான மாணவர்கள் போதுமான தண்ணீர் அருந்துவதில்லை. எனவே மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதன் காரணமாக அவர்களது உடல் நல்ல ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்குமென மாணவர்களுக்கு கூற வேண்டும்.

மாணவர்கள் தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளின் காரணமாக உடலில் ஏற்படும் பல்வேறு விதமான நோய்கள் எவ்வாறு தடுக்கப்படுகின்றன என்பதையும் எடுத்துக்கூற வேண்டும். மாணவர்களுக்கு ஒரு நாளைக்குச் சராசரியாக 8 டம்ளர் தண்ணீர் போதுமானதாக இருக்கலாம்.ஆனால் மாணவர்கள் பள்ளிக்கு பயணம் மேற்கொள்வது, விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அதிக அளவு தண்ணீர் அருந்துவது நல்லது.

தண்ணீர் அருந்துவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது. தண்ணீரானது உடலின் வெப்பத்தை சீராக வைக்கும். உடலில் தண்ணீர் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்களை சுமந்து செல்வதோடு கழிவுகளை வெளியேற்றும். உடலில் மெட்டாபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது.

போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால் தசைகளில் பிடிப்புகள் அதிகரிக்கும். அவற்றை வெளியேற்ற நீர் மிகவும் இன்றியமையாதது. தண்ணீர் குடலியக்கத்தை சீராக வைப்பதால் மலச்சிக்கல் தவிர்க்கப்படும். தண்ணீர் போதுமான அளவில் அருந்துவதால் சிறுநீர் பாதை தொற்று குறையும்.இதனை பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை தெரிவிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.