Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 25, 2019

ஆசிரியர்களின் குறைகள் என்ன? ஆராய பள்ளி கல்வி கமிஷனர் அழைப்பு

ஆசிரியர்கள் தொடர்பான குறைகளை கேட்க, சங்க நிர்வாகிகளுக்கு, பள்ளி கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன் அழைப்பு விடுத்துள்ளார். விரைவில், குறை தீர் கூட்டம் நடக்க உள்ளது.தமிழக பள்ளி கல்வித் துறையில், ஒவ்வொரு நாளும் பல்வேறு மாற்றங்கள் அரங்கேற்றப் படுகின்றன. அவற்றில் சில மாற்றங்கள் ஆக்கப்பூர்வமானதாகவும், சில மாற்றங்கள் குழப்பமானதாகவும் உள்ளன. பாடத் திட்டம், தேர்வு முறை, விடை திருத்தம் உள்ளிட்டவற்றில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில பாராட்டையும், சில விமர்சனங்களையும் ஏற்படுத்தின.



இந்நிலையில், நிர்வாக மாற்றத்தில் முக்கிய அங்கமாக, பள்ளி கல்வி இயக்குனரகத்தில், புதிதாக கமிஷனர் பதவி உருவாக்கப் பட்டுள்ளது.முதல் கமிஷனராக, கேரளாவைச் சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப் பட்டுள்ளார். இவர், டில்லியில், மத்திய அரசின், 'நிடி ஆயோக்' அமைப்பின் இயக்குனராகவும், மத்திய நிதி அமைச்சக அதிகாரியாகவும், விருதுநகர் மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பள்ளி கல்வியில் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள இவர், பள்ளி கல்வியின் நிர்வாகப் பணிகளை தெரிந்து கொள்ளவும், ஆசிரியர்கள் நியமனம், பள்ளிகளின் செயல்பாடுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகிறார்.



ஆசிரியர் சங்கங்களின் குறைகளை கேட்க, அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக, ஆசிரியர் சங்க நிர்வாகிகளை, அண்ணா நுாலக அரங்கில், நாளை சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப் பட்டது. பல்வேறு நிர்வாக காரணங்களால் கூட்டம் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. கூட்டம் நடத்தும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, ஆசிரியர் சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, பள்ளி கல்வி அமைச்சராக செங்கோட்டையனும், செயலராக உதயசந்திரனும் பொறுப்பேற்ற போது, சென்னை, தி.நகரில் உள்ள தியாகராயர் அரங்கில், நள்ளிரவு, 2:00 மணி வரை, ஆசிரியர் சங்க நிர்வாகிகளை சந்தித்து, குறை கேட்டனர்.



அவற்றில், பெரும்பாலான குறைகள் தற்போது வரை தீர்க்கப்படாமல் அப்படியே உள்ளதாக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில், பள்ளி கல்வி கமிஷனர் குறை கேட்பதாவது தீர்க்கப்படுமா என, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ( தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்)