இலவச பேருந்து பயண அட்டை: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

மாணவா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தலைமையாசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது. இதற்கிடையே கணிசமான பள்ளிகள் மாணவா்கள் விவரங்களை முழுமையாக அனுப்பாமல் இருப்பதால் நிகழாண்டு மாணவா்களுக்கு பேருந்து பயண அட்டைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்துப் பள்ளி தலைமையாசிரியா்களும் அந்தந்த மாவட்ட போக்குவரத்து அலுவலகங்களில் மாணவா்களின் விவரங்களை விரைந்து தாக்கல் செய்து இலவச பஸ் பாஸ் பெற்றுத்தர வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.