சூரியகிரகணத்தை எப்படி பார்ப்பது? பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு


தேனி, டிச., 26ல் தோன்றும், சூரிய கிரணத்தை பாதுகாப்பாக பார்க்க, தென்மாவட்ட பள்ளி மாணவர்களிடையே, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.தேனி பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியரிடம், இந்திய அணு ஆராய்ச்சித்துறை அறிவியலாளர், டாக்டர் வெங்கடேசன், பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்கள் ரஞ்சித்குமார், மணிகண்டன், ராதிகா ஆகியோர், சூரிய கிரகண நாளன்று, எவ்வாறு அதை பார்ப்பது என, விளக்கினர்.வெங்கடேசன் கூறியதாவது:டிச., 26ம் தேதி காலை, 8:00 மணி முதல், 11:20 மணி வரை, கேரளாவின் கோழிக்கோடு, தமிழகத்தின் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, திருச்சி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில், முழு சூரிய கிரகணம் தோன்ற உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், கல்பாக்கம் இந்திய அணு ஆராய்ச்சித்துறை இணைந்து, பள்ளிகளில், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.சாதாரண மக்களுக்கு, அறிவியல் அதிசயங்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.அதற்காகவே, சூரிய கிரகணத்தை, எளிதாக நாம் பலுான் கண்ணாடி, அட்டை பெட்டியில் சிறு துளையிட்டு, பாதுகாப்பாக காண்பது குறித்து விளக்குகிறோம்.பாகைமானியால், ஒளி அளவுகளை கணக்கிட்டு, அதன் வழியாக, கட்டடத்தின் உயரம் கண்டறியவது, முக்கோணம், செங்கோணம் வடிவ கணக்குகளை கண்டறிவது உள்ளிட்ட கணித பயன்பாடுகளையும், அறிவியல் நிகழ்வுகள் மூலம், மாணவர்களுக்கு விளக்கி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.