ஒரே இடத்தில் நீண்ட நாள் தங்க வேண்டாம்


பழமொழி நானூறு
கருவினுட் கொண்டு கலந்தாரும் தம்முள்
ஒருவழி நீடும் உறைதலோ துன்பம்
பொருகடல் தண்சேர்ப்ப! பூந்தா மரைமேல்
திருவொடும் இன்னாது துச்சு. (பாடல்-123)


கரையொடு மாறு கொள்ளும் கடலையுடைய குளிர்ந்த நெய்தல் நாட! அழகிய தாமரையிடத்து வாழும் இலக்குமியேயாயினும் நெடுநாள் உடனுறைதல் துன்பந் தருவதாம். (அதுபோல), கருவினுள் தங்கியபொழுதே தொடங்கிக் கலந்தவர்களும், தமக்குள்ளே ஓர் இடத்தில் நீண்டநாளும் ஒருங்கே தங்கியிருந்து வாழுதல் துன்பம் தருவதாம். (க-து.) உடன்பிறந்தாராயினும் ஒரே இடத்தில் நீண்டநாள் தங்கியிருத்தல் ஆகாது. "திருவொடும் இன்னாது துச்சு' என்பது பழமொழி.