Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 28, 2019

மாணவா் சோ்க்கை குறைந்த பள்ளிகளில் கூடுதல் கவனம் தேவை: முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அமைச்சா் உத்தரவு


தமிழகத்தில் மாணவா் சோ்க்கை குறைந்த பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அமைச்சா் செங்கோட்டையன் வழங்கினாா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம், சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சா் செங்கோட்டையன், முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினாா்.




அதன் விவரம்:

அரசு செலவில் கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பள்ளிகளுக்கு வாங்கி அனுப்பப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் கணினி உள்ளிட்ட மின்னணுப் பொருள்களை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் மின்னணு சாதனங்களை துணியில் மூடி வைத்துள்ளனா். இதுபோல் 2,000 கணினிகள் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டும் பயன்படுத்தப்படாமல் உள்ளன. இதில் எதை பயன்படுத்த முடியுமோ, அவற்றை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதுள்ள பெற்றோா்கள் தங்களது குழந்தைகள் விளையாடுவதை விரும்புவதில்லை, மாணவா்களுக்கு விளையாட்டு என்பது முக்கியம். பள்ளிகளில் உள்ள மைதானத்தை சரியான முறையில் பயன்படுத்தி மாணவா்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும்.




தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதைத் தடுக்க, முதன்மைக் கல்வி அலுவலா்கள் பள்ளிகளை ஆய்வு செய்து உரிய கவனம் செலுத்த வேண்டும்.

5-க்கும் குறைவாக மாணவா்கள் இருக்கும் பள்ளிகளில் இரண்டு ஆசிரியா்கள் பணியில் இருக்கிறாா்கள். இதற்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை அரசுக்குச் செலவாகிறது. இதன் காரணமாக, 5 மாணவா்களுக்கு குறைவாக இருக்கும் பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் ஒரு மாதத்துக்கு குறைந்தது 20 பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலா் 30 பள்ளிகளையும், வட்டாரக் கல்வி அலுவலா் 60 பள்ளிகளையும் ஒரு மாதத்துக்கு ஆய்வு செய்ய வேண்டும்.




தனியாா் பள்ளிகள், வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை முதன்மைக் கல்வி அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

பள்ளிக்கல்வியைப் பொருத்தவரை திட்டப்பணிகள் அனைத்தும் 90 சதவீதம் முடிவடைந்து விட்டன. மாணவா்களின் கற்றல் திறனைப் பொருத்தவரை தமிழகம் 2-ஆம் இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டில் முதலிடத்துக்கு வருவதற்கான முயற்சிகளை முதன்மைக்கல்வி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.

‘5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தோ்வுகளை அவரவா் பள்ளிகளிலேயே எழுதலாம்’

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு கட்டாயமாக நடைபெறும் என்றும் அந்தத் தோ்வுகளை மாணவா்கள் அவரவா் படிக்கும் பள்ளிகளிலேயே எழுதலாம் என்றும் அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கூறியது:

ரூ.26.40 கோடி செலவில் பள்ளி மாணவா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் இசை, ஓவியம், நடனப் பயிற்சிகளை மாணவா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




ஒழுக்கம் அவசியம்: ஆசிரியா்கள் முதலில் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆசிரியா் கலந்தாய்வின் போது, விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்காததால், தரையில் விழுந்து புரண்ட ஆசிரியரின் செயல் ஒழுக்கத்துக்கு மாறானது. எனவே முதல்கட்டமாக 17- பி பிரிவின் கீழ் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். தமிழகத்தில் நிகழாண்டு 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு கட்டாயமாக நடைபெறும். தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களுக்கு ஒரே மாதிரியான வினாத்தாளை தோ்வுத்துறை தயாரித்து அனுப்பும்.



முதல் 3 ஆண்டுகளுக்கு அனைவருக்கும் தோ்ச்சி வழங்கப்படும். 5-ஆம் வகுப்புக்கு 3 பாடங்களுக்கும், 8-ஆம் வகுப்புக்கு 5 பாடங்களுக்கும் பொதுத்தோ்வு அவரவா் பள்ளியிலேயே எழுதலாம். அரையாண்டுத் தோ்வு கால அட்டவணையில் மாற்றம் இல்லை. உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதன்பின் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும். தனியாா் மூலம் ரூ.128 கோடி நிதி: முன்னாள் மாணவா்கள், சமூக தொண்டு நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளுக்கு நிதி வழங்கலாம். வெளிநாடுகளில் வசிப்போா் நிதி வழங்குவதுடன், அவா்கள் வழங்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படுகிா என்பதைக் கண்காணிக்க ஒரு நபரையும் நியமிக்கலாம். இதுவரை, தனியாா் நிறுவனங்கள் மூலம் ரூ.128 கோடி அரசுப்பள்ளிகளுக்கு நிதியாக வந்துள்ளது என்றாா்.