Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 8, 2019

வீடு வாங்குவோருக்கு புதிய சலுகை; மத்திய அரசு அறிவிப்பு


தேக்க நிலையில் உள்ள ரியல் எஸ்டேட் துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கும் திட்டத்தின் கீழ், வீடு வாங்குவோருக்கு வீட்டுக்கடன் தொடர்பான சலுகையை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் தேக்கநிலை ஏற்பட்டு உள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.




டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் பல பெரிய குடியிருப்பு கட்டுமான திட்டங்கள் தொடங்கப்பட்டு நிறைவு பெறாமல் உள்ளன. இதனால் அந்த குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்குவதற்காக பணம் செலுத்தியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வீடு வாங்குவதற்காக வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் அதற்கான தவணை தொகையை செலுத்தி வருகிறார்கள். வீடுகள் அவர்களிடம் ஒப்படைக்கப்படாததால், தற்போது அவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு தொடர்ந்து வாடகை கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது.




ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது. அதன்படி, நாட்டில் நிலுவையில் இருக்கும் 1,600 வீட்டு வசதி திட்டங்களை முடிக்க உதவும் வகையில் ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
இந்த தொகையில் 10 ஆயிரம் கோடியை மத்திய அரசும், மீதம் உள்ள ரூ.15 ஆயிரம் கோடியை பாரத ஸ்டேட் வங்கியும், எல்.ஐ.சி. நிறுவனமும் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக, கூட்டம் முடிந்ததும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் தெரிவித்தார். இதன் மூலம் 4 லட்சத்து 58 ஆயிரம் வீடுகளை கொண்ட 1,600 வீட்டு வசதி திட்டங்கள் மீண்டும் புத்துயிர் பெறும் என்றும், அத்துடன் வேலைவாய்ப்பு பெருகுவதோடு சிமெண்டு, இரும்பு போன்றவற்றின் தேவை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.




இந்த நிலையில், முடிவு பெறாமல் இருக்கும் ஒரு குடியிருப்பு கட்டுமான திட்டத்துக்கு அதிகபட்சமாக ரூ.400 கோடி வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் நேற்று கூறி உள்ளது.
அதேசமயம், மேல் கோர்ட்டுகளில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக நிலுவையில் இருக்கும் கட்டுமான திட்டங்களுக்கு இந்த கடனுதவி திட்டம் பொருந்தாது என்றும் கூறி இருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ், வீடு வாங்குவோருக்கு சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, வீடு வாங்குவோர் தாங்கள் ஏற்கனவே வீடு வாங்குவதற்காக கடன் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்திடம் இருந்து அவற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கூடுதல் கடன் தொகை பெறலாம் அல்லது வீட்டுக்கடனை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் நிதி அமைச்சகம் கூறி உள்ளது.