Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 25, 2019

கவுன்சிலிங்கில் சேர்ந்தால் தான் 'ஸ்காலர்ஷிப்': தமிழக உயர் கல்வித் துறை


சென்னை: இன்ஜினியரிங் படிப்பில், கவுன்சிலிங் வழியாக சேரும் மாணவர்களுக்கு மட்டும், 'ஸ்காலர்ஷிப்' வழங்கப்படும் என, உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. தமிழக உயர்கல்வித்துறையின் அனுமதியுடன், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், இந்த கவுன்சிலிங்கை நடத்துகிறது.



அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகள், உறுப்பு கல்லுாரிகள், மண்டல கல்லுாரிகள்; அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள அரசு மற்றும்தனியார் கல்லுாரிகளில், கவுன்சிலிங் வழியாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனியார் கல்லுாரிகளில், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்லுாரிகள், 50 சதவீத இடங்களையும், சிறுபான்மை அல்லாத கல்லுாரிகள், 35 சதவீத இடங்களையும், நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்புகின்றன.கவுன்சிலிங் வழியாக சேரும் மாணவர்களுக்கு மட்டுமே, பல்வேறு சலுகைகளை அரசு அளித்து வருகிறது. அதாவது, கவுன்சிலிங் வழியே சேர்ந்தவர்களிடம் மட்டும், அரசு நிர்ணயித்த அளவின்படியே, கல்வி கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் வசூலிக்கப் படுகின்றன.



கவுன்சிலிங்கில்சேர்ந்த மாணவர்களிடம், எந்த கல்லுாரியும் நன்கொடை வசூலிக்க முடியாது;அவர்கள் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்துக்காக, தேர்வை எழுத விடாமல் தடுக்க முடியாது. அதேபோல, கவுன்சிலிங் வழியே சேர்ந்த மாணவர்களுக்குத்தான், மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை கிடைக்கும் என, 2018 - 19ல் அறிவிக்கப் பட்டது.இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலர் மங்கத்ராம் சர்மா, அனைத்து கல்லுாரிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய அறிவிப்பு: தமிழக அரசின் கவுன்சிலிங் வழியே சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, கல்வி உதவித்தொகை பெற முடியும்.



இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் குறைவாக உள்ளனர். எனவே, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும். அதேநேரம், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, கல்வி உதவித்தொகை பெற முடியாது. எனவே, அந்த மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.