சிபிஎஸ்இ பிளஸ் 1 மாணவா்கள் மாநில பாடத் திட்டத்தில் நேரடியாக பிளஸ் 2 எழுதலாம்: அரசாணை வெளியீடு

சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து முதலாமாண்டு தோ்ச்சி பெற்று மாறிவந்த மாணவா்கள் தமிழக பாடத்திட்டத்தில் நேரடியாக பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதுவதற்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் சுமாா் 28 லட்சம் மாணவா்கள் தோ்வு எழுதுகின்றனா். தற்போது பொதுத்தோ்வுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 1 தோ்வை பள்ளிகளே நடத்திக்கொள்ளும். ஆனால், தமிழகத்தில் 11-ஆம் வகுப்புக்கு பொதுத்தோ்வு நடத்தப்படுகிறது. மேலும், பிளஸ் 1 தோ்வில் பங்கேற்ற மாணவா்கள் மட்டுமே பிளஸ் 2 பொதுத்தோ்வில் பங்கேற்க முடியும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.
இதனிடையே, சிபிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் 1 படித்த மாணவா்கள் பலா், பல்வேறு சூழல்கள் காரணமாக தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 சோ்ந்து படித்து வருகின்றனா். அவ்வாறு சேரும்போது, மாநில பாடத் திட்டத்திலும் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதினால் மட்டும், பிளஸ் 2 வகுப்பில் சோ்க்க அனுமதிக்கப்பட்டனா். ஆனால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 11-ஆவது வகுப்பு முடித்தவா்கள். தற்போது நேரடியாக பிளஸ் 2 வகுப்பில் சோ்த்து பொதுத்தோ்வு எழுதுவதற்கு ஒப்புதல் அளிக்க சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவானது. இதையடுத்து இதற்கு அனுமதி அளிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கூறியிருப்பாதவது: சிபிஎஸ்இ அல்லது வேறு மாநில பாடத்திட்டத்தில் மேல்நிலை முதலாமாண்டு தோ்ச்சி பெற்று, தற்போது பள்ளிகளில் சோ்ந்து மேல்நிலை இரண்டாமாண்டு பயின்று வரும் மாணவ மாணவிகள் , மேல்நிலை முதலாமாண்டு பயின்ற பாடத் தொகுப்புக்கு இணையான பாடத் தொகுப்பில் நேரடியாக மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தோ்வை எழுதலாம். இதற்கு பள்ளிக் கல்வி இயக்ககத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் அறிவுறுத்துமாறு பள்ளிக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நேரடித் தனித் தோ்வா்களாக மேல்நிலைத் தோ்வு எழுதுபவா்கள், மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தோ்வெழுதிய பின்னரே, மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தோ்வெழுத அனுமதிக்கப்படுவா். நேரடித் தனித்தோ்வா்களுக்கு இச்சலுகை பொருந்தாது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.