Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, December 26, 2019

சூரிய கிரகணம் 2019 : சூரியனை கேது விழுங்குமா - புராண கதை சொல்வதென்ன?


மதுரை: சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் எப்பொழுதாவது சந்திரன் குறுக்கிடும்போது ஏற்படும் நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும். அதே போல், சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மேல் விழும்போது ஏற்படும் நிகழ்வு சந்திர கிரகணம். ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே இந்த நிகழ்வு ஏற்படும். ஆனால் சூரியனையும் சந்திரனையும் பழி வாங்க ராகுவும் கேதுவும் சில மணி நேரம் விழுங்குவதால் கிரகணம் ஏற்படுகிறது என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.




பொதுவாக ஒரே தந்தைக்கும் இரு வேறு தாய்க்கும் பிறந்த குழந்தைகளுக்குள் எப்போதுமே சுமூகமான உறவு இருப்பது கிடையாது என்று ஜோதிடர்கள் சொல்வதுண்டு. சொத்துக்களை பிரித்துக்கொள்வதிலும், யாருக்கு அதிக உரிமை உள்ளது என்பதிலும் போட்டியும் பொறாமையும் இருந்து வரும். இறுதியில் அது வெட்டு, குத்து என்று பரம்பரை பகையில் போய் முடியும். அப்படியே அவர்களுக்குள் சுமூக உறவு இருந்தாலும் கூட அது அபூர்வமாகவே இருக்கும். அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, இந்து சமய நம்பிக்கையின் படி, நம்மை விட உயர்ந்த நிலையில் இருக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் அது பொருந்தும்.

இந்து சமய புராணங்களின் படி, காஸ்யப முனிவர்-அதிதி தம்பதிகளுக்கு பிறந்தவர்கள் தேவலோக வாசிகளான இந்திரன், வாயு, அக்னி போன்ற தேவர்கள். அதேபோல் காஸ்யபர்-திதி தம்பதிக்கு பிறந்தவர்கள் இரண்யாட்சன், இரண்யகசிபு உள்ளிட்ட அசுரர்கள். இதனால் தான் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் என்றைக்குமே ஏழாம் பொருத்தமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.திருமாலிடம் தேவர்கள் தஞ்சம்




கிருதயுகம் நடைபெற்ற சமயத்தில், அமுதம் பருகினால் என்றைக்கும் இளமையாகவும், அதிக பலமும், மரணமே ஏற்படாமல், சுகபோகமாக வாழலாம் என்பதை அறிந்த இந்திரன் முதலான தேவர்கள், அந்த அமுதம் பாற்கடலின் அடியில் உள்ளதை அறிந்து, பாற்கடலில் வாசம் செய்யும் திருமாலை தஞ்சமடைந்தனர்.


அசுரர்களுடன் ஒப்பந்தம்

அனைத்தையும் உணர்ந்தவரான திருமாலும், பாற்கடலை கடைவதற்கு மந்தார மலையை மத்தாகவும், தான் சயனிக்கும் வாசுகி பாம்பை கயிறாகவும் கொடுத்து உதவினார். அவ்வுளவு பெரிய பாற்கடலை கடைவதற்கு தங்களால் முடியாது என்பதால், உதவிக்கு தன் சகோதரர்களான அசுரர்களையும் துணைக்கு அழைத்தனர்.




அசுரர்கள் நிபந்தனை

அவர்களும், தாங்கள் பாற்கடலை கடைவதற்கு உதவ தயார் என்றும், அதற்க பிரதிபலனாக, அமுதத்தில் சரிபாதி தங்களுக்கும் வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். தேவர்களும் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அசுரர்களின் உதவியோடு பாற்கடலை கடைந்தனர். அபோது அதில் இருந்து அமுதம் வெளிப்பட்டது. ஆனால், அமுதத்தை அசுரர்கள் பருகினால், அவர்களை சமாளிக்கவே முடியாது, ஏற்கனவே அவர்களால் ஏகப்பட்ட தொல்லைகளை அனுபவித்து வருகிறோம். இதில் அமுதத்தையும் உண்டால், தேவர்களான தங்களுக்கு தொல்லைகள் அதிகரிக்கும் என்பதை உணர்ந்த தேவர்கள், மீண்டும் திருமாலை தஞ்சமடைந்தனர்.


மேல்பகுதி எனக்கு கீழ் பகுதி உனக்கு

திருமாலும், அசுரர்களுக்கு அமுதம் கிடைப்பதை தடுக்க நினைத்து மோகின் வடிவம் எடுத்தார். மோகினியின் அழகில் சொக்கிப்போன அசுரர்கள், மோகினியே அனைவருக்கும் அமுதத்தை பரிமாறட்டும் என்று கேட்டுக்கொள்ள, அதற்கு தேவர்களும் சம்மதித்தனர். ஆனால், யாருக்கு முதலில் பரிமாறுவது என்பதில் தகராறு ஏற்பட, அமுத கலசத்தின் மேல் பகுதியில் இருக்கும் தெளிவான அமுதத்தை தேவர்களும், அடிப்பகுதியில் இருக்கும் அமுதத்தை அசுரர்களும் எடுத்துக்கொள்வது என்று முடிவாயிற்று.





உள்குத்தை அறிந்த ஸ்வர்பானு

முதலில் தேவர்கள் இருந்த வரிசையில் அமுதத்தை மோகினி பரிமாறினாள். ஆனால் இதில் ஏதோ உள்குத்து இருக்குமோ என்று சந்தேகப்பட்ட ஸ்வர்பானு என்ற அசுரன் மாறு வேடத்தில் தேவர்கள் இருந்த வரிசையில் உட்கார்ந்தான். இந்த விஷயம் மோகினி வடிவில் இருந்த திருமாலும் அறிவார். இதை சூரியனும் சந்திரனும் பார்த்துவிட்டனர். ஆனால், அதற்குள் மோகினி ஸ்வர்பானுவுக்கு அமுதத்தை அளித்து விட்டார். ஸ்வர்பானுவும் அவசர அவசரமாக அமுதத்தை பருகிவிட்டான்.


போட்டுக்கொடுத்த சூரிய சந்திரர்கள்




சூரியனும் சந்திரனும், உடனடியாக இதை மோகினியிடம் சென்று உண்மையை போட்டுக்கொடுத்து விட்டனர். இதைக் கேள்விப்பட்ட மோகினி தன்னிடம் இருந்த அகப்பையால் ஸ்வர்பானுவின் தலையில் ஓங்கி அடித்தார். இதனால் ஸ்வர்பானுவின் தலையும் உடலும் துண்டாகி விழுந்தது(அதனால் தான் அகப்பையால் அடிக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்). ஆனாலும், அமுதத்தை உண்டதால் உயிர் போகாமல் தலையும் உடலும் தனித்தனியாக விழுந்து கிடந்தும் துடித்துக்கொண்டிருந்தது.


ஸ்வர்பானுவை ஒதுக்கிய அசுரர்கள்

ஒப்பந்தத்தை அசுரர்கள் மீறியதால், அவர்களுக்கு அமுதத்தை அளிக்காமல் முழுவதையும் தேவர்களுக்கு வழங்கிவிட்டார். ஸ்வர்பானுவால் தான் தங்களுக்கு அமுதம் கிடைக்காமல் போனது என்பதை அறிந்த அசுரர்கள் ஸ்வர்பானுவை அசுர குலத்திலிருந்து, ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது போல் விலக்கி வைத்துவிட்டனர். தலை வேறு உடல் வேறாக கிடந்த ஸ்வர்பானு திருமாலை வணங்கி தங்களுக்கு நல் வழி காட்டுமாறு வேண்டினான்.


நவக்கிரக மண்டலத்தில் ராகு-கேது




திருமாலும் மனமிறங்கி, உடலோடு பாம்பின் தலையையும், தலையோடு பாம்பின் உடலையும் பொருத்தி இருவருக்கும் ராகு, கேது என்று பெயரிட்டார். இருவரையும் நவக்கிரக மண்டலத்தில் மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் நேர் எதிர் திசையில் சஞ்சரிக்கும் படி அருள் பாலித்தார். அன்று முதல் ராகுவும் கேதுவும் நவக்கிரக மண்டலத்தில் சஞ்சரித்து வருகின்றனர்.


பழிவாங்க வேண்டும்

ஆனாலும், தனக்கு ஏற்பட்ட கதிக்கு காரணம் சூரியனும் சந்திரனும் தான் என்பதை உணர்ந்து, அவர்கள் இருவரையும் பழிவாங்க வேண்டும் என்று விரும்பி பிரம்மனை நோக்கி பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருந்து வரம் பெற்றனர். அதன்படி, ஆண்டு தோறும், நான்கு முறை சூரிய சந்திரரின் நிழல் பூமியின் மேல் விழாமல் தடுக்கும் வரத்தை கொடுத்தார்.





சூரிய சந்திர கிரகணம்

அதன் படியே, அன்று முதல் நம்பியாரைப் போல் கருவிக்கொண்டு, ஆண்டுக்கு குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு முறை அமாவாசை நாளில் சூரியனின் நிழலையும், பவுர்ணமி நாளில் சந்திரனின் நிழலையும் பூமியின் மேல் படாமல் தடுத்து வருகின்றனர். இதையே சூரிய கிரகணம் என்றும் சந்திர கிரகணம் என்றும் புராணங்கள் சொல்கின்றன.


சூரியன் பூமி சந்திரன் ஒரே நேர் கோட்டில்

ஆனால், அமாவாசை நாளில் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் ஒரே நேர்கோட்டில் சந்திரன் வருவதால் சூரிய ஒளி பூமியின் மேல் விழாமல் தடுக்கப்படுவதால் ஏற்படுவதே சூரியகிரகணம் என்றும், பவுர்ணமி நாளில் சந்திரனுக்கும் சூரியனுக்கும் நடுவில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் ஏற்படுவது சந்திர கிரகணம் என்று அறிவியில் பூர்வமான உண்மையாகும்.





கடைசி சூரிய கிரகணம்

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழவிருக்கிறது. இது கங்கண சூரியகிரகணம் என்றழைக்கப்படுகிறது. அதாவது, மோதிரம் போல் அல்லது நெருப்பு வளையம் போல் தோற்றமளிக்கும். இது அரிதாகவே நிகழும் சூரியகிரகணமாகும். ஜோதிட சாஸ்திரப்படி நாளை கேது என்னும் பாம்பு சூரியனை விழுங்கும் நிகழ்வு என்பதால் இதற்கு கேது கிரகஸ்த சூரியகிரகணம் என்று கூறப்படுகிறது.


ஆறு கிரகங்களின் சேர்க்கை

அதோடு, இன்று மற்றொரு அரிதான நிகழ்வாக சூரிய கிரகணம் நிகழம் நேரத்தில் தனுசு ராசியில், சூரியன், சந்திரன், புதன், வியாழன், சனி, கேது ஆகிய 6 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வருகின்றன. இது எப்போதாவது அறிதாகவே நிகழும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக இந்த மாதிரியான இயற்கை நிகழ்வுகளின் போது ஏதாவது இயற்கை அசம்பாவிதங்கள் நிகழும் என்று பொதுமக்கள் நம்புகின்றனர்.

சனிக்கிழமை சங்கடம்

கடந்த 1964ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதியன்று இதே போன்ற கிரக சேர்க்கையினால் தான் புயலால் தனுஷ்கோடி முற்றிலும் அழிந்தது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இதே போன்ற கிரக சேர்க்கையால் தான் சுனாமி ஏற்பட்டது. அந்த இரண்டு ஆண்டுகளிலும், அதாவது 1964ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதியன்று சனிக்கிழமை. அதே போல் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதியும் சனிக்கிழமை தான். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி வியாழன் என்ற சுபதினத்தில் வருவதால் அது போல் எதுவும் நிகழாது என்று ஜோதிடர்களும், விஞ்ஞானிகளும் தெரிவிக்கின்றனர்.





கங்கண சூரியகிரகணம்

இந்திய நேரப்படி நாளை காலை 7:59:53 முதல் பிற்பகல் 13:35:40 வரை நிகழவிருக்கிறது. இந்தியாவில் சில பகுதிகளில் முழு சூரிய கிரகணமும், சில இடங்களில் பகுதி சூரியகிரகணமும், சில இடங்களில் கங்கண சூரியகிரகணமும் ஏற்படும். மேலும் ஒரே மாவட்டத்தில் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தை சில விநாடிகள் மட்டும் காணமுடியும், சில பகுதிகளில் சில நிமிடங்கள் காணமுடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.