2020 நீட் தேர்வுக்கு பள்ளிகளிலேயே ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு: கல்வி அலுவலர் தகவல்

மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் சித்த மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நடைமுறையில் உள்ளது. நீட் தேர்வுக்கு அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வாராந்திர இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், வரும் 2020ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3ம் தேதி நடக்க உள்ளது. இந்தாண்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடக்கும். நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது நேற்று முன்தினம் 2ம் தேதி தொடங்கியது. விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.ஆயிரத்து 500ம் பொது, இ.டபிள்யு.எஸ், ஒபிசி-என்சிஎல் பிரிவினருக்கு ரூ.1400ம், எஸ்சி., எஸ்டி., பிடபிள்யு, மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ.800ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
ஆன்லைனில் விண்ணப்பிக்க வருகிற ஜனவரி 1ம் தேதி முற்பகல் 11.50 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். இதற்கான அதிகாரப்பூர்வமான என்டிஏ இணையதளமான ntaneet.nic.in. என்ற இணையதளத்தில் அனுப்ப வேண்டும். வேறு வடிவத்திலான விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. ஒரு மாணவர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும். தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி விண்ணப்பங்களை கவனமாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களது இணையதள முகவரி மற்றும் கைபேசி எண் தெரிவிக்க வேண்டும். இதில் உரிய தகவல்கள் தெரிவிக்கப்படும்.
தேர்வு நாளில் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு ெசாந்த செலவில் அனுமதிக்கப்பட்ட அட்மிட் கார்டுடன் கட்டாயம் வரவேண்டும் என்பது உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கியதை அடுத்து ஆர்வம் உள்ள மாணவ மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் இணையதள மையங்களிலும் ஆன்லைன் பதிவு நடக்கிறது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பூபதி கூறுகையில், ''அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவ மாணவிகளில் விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு பள்ளிகளிலேயே அதற்குரிய உதவிகளை தலைமையாசிரியர்கள் செய்யவேண்டும். இலவச பயிற்சி மையங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு வாராந்திர நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் வாரங்களில் இந்த பயிற்சி மேலும் தீவிரப்படுத்தப்படும்'' என்றார்.