Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, December 4, 2019

சந்திராயன்2 விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுப்பிடித்த மதுரை பொறியாளர் சண்முக சுப்ரமணியன்


சந்திரயான் 2 விண்கலம் சுமந்து சென்ற விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க மதுரை பொறியாளர் சண்முக சுப்ரமணியன் கொடுத்த தகவலே காரணம் என்று நாசா தெரிவித்துள்ளது.




இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாசாவின் லுனார் ரிகனைஸ்ஸான்ஸ் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் தரையிறக்க திட்டமிடப்பட்ட இடத்தின் புகைப்படத்தை செப்டம்பர் 26ஆம் தேதி வெளியிட்டிருந்தோம். விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை கண்டறிவதற்காக பல ஆய்வாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தேடியதாகவும், அதில் சண்முக சுப்ரமணியன் என்ற இந்திய பொறியாளர் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் குறித்து நாசாவிற்கு தெரியப்படுத்தினார்.

சண்முக சுப்பிரமணியன் அளித்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்டு அந்த இடத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கூறிய இடத்தில் இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம் என தெரிவித்துள்ளனர்.




விக்ரம் லேண்டரின் உதிரி பாகங்கள் இருப்பிடம் குறித்து புகைப்படத்தையும் நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் சண்முக சுப்பிரமணியன் கண்டறிந்த உடைந்த பாகங்கள் இருக்கின்ற இடத்தை 'S' என்று நாசா குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, சந்திரயான்2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய இஸ்ரோ சார்பில் விக்ரம் லேண்டர்‌ அனுப்பப்பட்டது. செப்டம்பர் 7ஆம் தேதி நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர்‌ உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவிற்கு, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உதவியது. அதன்படி, நாசாவின் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் இருப்பிடத்தை தற்போது தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் அளித்த தகவலின் அடிப்படையில் கண்டுபிடித்திருக்கிறது.



சண்முக சுப்ரமணியனின் கண்டுபிடிப்பை பாராட்டி நாசா அவருக்கு மின்னஞ்சல் வாயிலாக பாராட்டுகளையும் தெரிவுத்துள்ளது

மதுரையைச் சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் சென்னை தரமணியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.