ஆளை மறைக்கும் மாயக் காகிதம்! விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு


ஹாரி பாட்டர் படங்களில் வரும், ஆளை அடுத்தவர் கண்ணில் படாமல் மறைக்கும் துணி மிகவும் பிரபலம். ஆனால், இதுவரை அது போன்ற ஒரு தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரவில்லை.
ராணுவம் மற்றும் உளவுத் துறையினருக்கு மிகவும் தேவைப்படக்கூடிய இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க, பல விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஆனால், அண்மையில் கனடாவை சேர்ந்த, 'ஹைப்பர் ஸ்டெல்த் பயோடெக்னாலஜி கார்ப்' இத்தொழில்நுட்பத்தை உருவாக்கி, காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது.
ஒரு பிளாஸ்டிக் காகிதம் போல இருக்கும் இந்த கண்டுபிடிப்பு, மனித உடல் வெளிப்படுத்தும் அகச்சிவப்பு, புற ஊதா மற்றும் வெப்பக் கதிர்களை மறைத்துவிடுகிறது. எனவே இதன் பின்னால் ஒரு மனிதர் நிற்பது, சில அடிகள் தொலைவிலிருந்து பார்ப்பவருக்குக் கூட தெரிவதில்லை.
காகித வடிவில் இருக்கும் இந்த தொழில்நுட்பத்தை ராணுவ வீரர்கள் மறைந்திருந்து தாக்கவும், பீரங்கி போன்ற தளவாடங்களை வானில்.இருந்து பார்த்தால், தெரியாமல் மறைக்கவும் பயன்படுத்த முடியும்.
தங்கள் தொழில்நுட்பத்தை, தவறான ஆசாமிகள் பயன்படுத்தக்கூடும் என்பதால், இப்போதே, இந்தக் காகிதத்தின் பின்னால் இருப்பதைக் காட்டும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆராய்ச்சியிலும், ஹைப்பர் ஸ்டெல்த் பயோடெக்னாலஜி கார்ப் இறங்கியிருக்கிறது.