Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 27, 2019

மதிய உணவுத் திட்டம் : அனைவருக்கும் பயனுள்ளதாக்க உரிய திட்டமிடல் அவசியம்!


பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு விஷயத்தில், தற்போது ஒரு திடமான மற்றும் விரிவான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன.

மதிய உணவுத் திட்டம்...

பசிக் கொடுமையால் பள்ளி செல்ல இயலா சிறுவர்களை ஈர்ப்பதற்காக, 25 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட திட்டம் இது. ஆனால், ஆண்டுகள் பல கடந்த பின்னும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல மாநிலங்களிலும் ஏராளமான குளறுபடிகள் தொடர்வது துரதிர்ஷ்டமானது. பள்ளிகளில் ஆரம்பக் கல்வி பயில வரும் மாணவர்களுக்கு உரிய ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். ஒரு வருடத்தில், பள்ளி நடைபெறும் 200 நாட்களில் தொடக்கக் கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் நாளொன்றுக்கு 300 கலோரி அளவுக்கு உணவும், 8 முதல் 12 கிராம் புரதச்சத்தும் வழங்கத் திட்டமிடப்பட்டது.




அதேபோல் அடிப்படைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 450 கலோரி அளவுக்கு உணவும், 12 கிராம் புரதச்சத்தும், தொடர்ந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு 700 கலோரி அளவுக்கு உணவும் 20 கிராம் புரதச்சத்தும் வழங்கப்படும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். பள்ளிகளில் பயிலும் சிறுவர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டியது, அவர்களுக்கான அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், பல்வேறு மாநிலங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டதன் நோக்கம் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது பல்வேறு நிகழ்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம், ஏறத்தாழ 17 மாநிலங்களில், மாணவர்களுக்கு பாதியளவுக்கே மதிய உணவு வழங்கப்படுகிறது என்பதும் நிரூபணமாகியுள்ளது. அதே நேரம், மதிய உணவின் தரமும் குறைந்துவிட்டதாக மத்திய தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டுத்துறை, பல்வேறு ஆய்வுகள் நடத்தி அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்காக நாடு முழுவதும் 11 லட்சம் பள்ளிகளில், 9 கோடி மாணவர்களுக்கு பல்லாயிரம் லட்சம் ரூபாய்களை மாநில அரசுகள், ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ஒதுக்குவதாக கூறுகின்றன. ஆனால் உணவின் தரம்? சமீபத்தில் உ.பி.யில் ஒரு லிட்டர் பாலில் பல மடங்கு தண்ணீர் கலந்து, 81 குழந்தைகளுக்கு கொடுத்தது போன்ற அவலம் தொடர்வது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.




நம் நாட்டில் முக்கால் பங்கு குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அல்லல்படுகின்றனர். தேசிய குடும்ப நலத்துறையின் ஆய்வுப்படி, நாட்டின் மக்கள் தொகையில் 38 சதவிகிதம் பேர் சீரான உணவின்றி உடல் நலிவுற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்திய ஒரு ஆய்வின்படி, அரிசி மற்றும் கோதுமை உணவுகளுக்குப் பதில் புரதச்சத்து மிகுந்த மற்றும் அதிக சத்துள்ள திணை, குதிரை வாலி, பயறு, தானியங்கள் போன்றவற்றை மதிய உணவாக கொடுத்தால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. வளரும் குழந்தைகளுக்கு பயறு, தானியங்கள்தான் சத்து மிகுந்த மாற்று உணவு என்ற கருத்தும் இன்று நிலவுகிறது.

சத்து மிகுந்த உணவு வழங்கப்படுகிறதா?

அதிக வெப்பம் நிலவும் வறண்ட நிலங்களில் பயிர்கள் விளைச்சல் தொடர்பான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமும் அக்ஷய பாத்ரா என்ற அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வின்படி, குழந்தைகளுக்கு சிறு தானிய வகை உணவுகளே சிறந்தவை என கூறியுள்ளன. மதிய உணவாக மாணவர்களுக்கு வெறுமனே அரிசி சாதமும் சாம்பாரும் கொடுப்பதை விட, தானிய வகை உணவுகளான இட்லி, கிச்சடி, உப்புமா போன்றவற்றில் பெருமளவு ஊட்டச்சத்துள்ளதாக பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எனவே ஊட்டச்சத்துள்ள உணவு விஷயத்தில், தற்போது ஒரு திடமான மற்றும் விரிவான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.




சர்வதேச அளவில், ஒரு லட்சம் பேரில் 178 பேர் தொற்றுநோய் பாதிப்புக்கு ஆளாவதாகவும், சராசரியாக 539 பேர் அளவுக்கு உயிரிழப்பு நிகழ்வதாகவும் கூறப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் இந்த எண்ணிக்கை 258, 682 என அதிகரித்துள்ளது. அளவுக்கு மீறி உணவு உண்ணும் பழக்கம் படிப்படியாக அதிகரித்து, சிறு வயதிலேயே நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சவாலான கொடுமைகளை எதிர்கொள்ள, அன்றாட உணவில் கம்பு, திணை போன்ற சிறுதானியங்களை எடுத்துக் கொள்வதே சிறந்த தீர்வாக அமையும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

கம்பு, சோளம், குதிரை வாலி, திணை, பயறு வகைகள் போன்றவற்றை கருவுற்ற பெண்கள் அன்றாட உணவில் சேர்ப்பதின் மூலம், பல்வேறு பேறுகால பிரச்னைகளில் இருந்து விடுபடுவதுடன், கருவில் வளரும் குழந்தைகளின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும் என்பதை நிதி ஆயோக் அமைப்பும் வலியுறுத்துகிறது. முன்னபெல்லாம் உணவில் சிறு தானியங்களின் பயன்பாடே அதிகமாக இருந்த இந்தியாவில், கடந்த பல ஆண்டுகளாக அரிசியும், கோதுமையும் அபரிமிதமாக ஆக்கிரமித்துவிட்டன.




மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்திலும் அரிசியும் கோதுமையுமே பிரதானமாகி விட்டது. எனவே வருங்கால சந்ததியினர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் திடமாக வளர வேண்டுமென்ற கவலையைப் போக்க வேண்டியது அவசியம். இதற்கு குழந்தைகளுக்கு மதிய உணவில் சிறு தானியங்களை சேர்ப்பதே அவசியமான ஒன்றாகும். சத்தான உணவு, சிறப்பான கல்வி வசதியின்றி லட்சக்கணக்கான குழந்தைகள் ஏங்கும் அவலம் நாட்டில் உள்ளது. இதனால் கல்வி மேம்பாட்டிற்காக மட்டும் அக்கறை செலுத்தினால் நாட்டுக்கு பெருமை கிடைத்துவிடாது. அதைவிட, இப்போதைய அவசிய மற்றும் அவசர நடவடிக்கையாக மதிய உணவில் சத்து மிக்க சிறு தானிய வகைகளை சேர்ப்பதுதான் நல்லது.

சிறு தானியங்கள் பயிரிட ஊக்கம் தருதல்:




நாட்டில் உள்ள 14 மில்லியன் ஹெக்டேர் சாகுபடி பரப்பளவுள்ள நிலங்களில் முக்கால் பகுதி மழையை நம்பியே உள்ளன. ஆனால், சுற்றுச் சூழலாலும், சீரான பருவநிலை நிலவாததாலும், ஆண்டுதோறும் காரீப், ராபி பருவத்தில் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதனால் பொருளாதார இழப்புக்கு விவசாயிகள் தள்ளப்படும் சூழலும் உருவாகிறது. போதிய மழைப்பொழிவு இல்லாததாலும், நீலத்தடி நீர் பற்றாக்குறையாலும், கரும்பு, நெல் போன்றவற்றை பயிரிடும் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இது போன்ற சூழலில், குறைந்த நீராதாரத்தில் விளையும் குறுகிய காலப் பயிர்களான சிறு தானியங்களான கம்பு, திணை போன்றவற்றை பயிரிட்டால் விவசாயிகளுக்கு பேருதவியாக அமைந்து நன்மை பயக்கும். மேலும் மணற்பாங்கான, மேடான மற்றும் தரிசு நிலப்பரப்பிலும் சோளம் போன்ற பயிர்களை விளைவிக்க முடியும் என்பதால், சிக்கலில் சிக்கியுள்ள விவசாயிகளுக்கும் புதிய நம்பிக்கை பிறக்கும்.




கர்நாடக மாநிலத்தில் வரும் 2020ஆம் ஆண்டு முதல் மதிய உணவில் பயறு வகைகளை வழங்க முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.12 மாநிலங்களில்,16 லட்சம் குழந்தைகளின் பசியைப் போக்க அரிசி மற்றும் கோதுமை உணவு வகைகளை சமைத்து வழங்கி வரும் அக்ஷயா தொண்டு நிறுவனம், பயறு, பருப்பு வகைகளை அரசு வழங்கும் பட்சத்தில் குழந்தைகளின் சத்தான உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று கூறியுள்ளது. இதேபோன்ற சூழல் நாடு முழுவதும் உருவாகும் பட்சத்தில், விவசாயிகளும் ஊக்கம் பெற்று பயறு, சிறு தானிய வகைகளை கூடுதலாக பயிரிட முன்வருவார்கள்.




இதன் மூலம் அங்கன்வாடி மையங்களில் சமையல் முறைகளிலும் மாற்றம் உருவாகும். மேலும், வரும் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் உறுதியளித்துள்ளது. எனவே, விவசாயிகளை உற்சாகப்படுத்த, அவர்கள் விளைவிக்கும் அனைத்து வகையான பயறு, தானியங்களுக்கும் ஆதார விலை கிடைக்கச் செய்ய வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். இதன்மூலம், விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில் உதவுவதுடன், நாட்டில் குழந்தைகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடிமக்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் பயிர்களின் விளைச்சலும் அதிகரித்து, அரசுக்கும் இரு விதத்தில் நன்மை பயப்பதாகவும் அமையும் என்பது நிச்சயம்