Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 6, 2019

சுவர் இடிந்து இறந்த அட்சயாவின் முத்தான எழுத்துக்கள்; அழிக்காமல் வைத்துள்ள மாணவர்கள்


நன்கு படிக்கும் அட்சயா வகுப்பறை கரும்பலகையில் எழுதிய தமிழ் எழுத்துக்களை மாணவியின் நினைவாக அழிக்காமல் வைத்துள்ளோம். அந்த எழுத்துக்களை பார்க்கும்போது இறந்த மாணவியை பார்ப்பது போல் உள்ளது' என சக மாணவ - மாணவியர் கூறினர்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் கண்ணப்பன் லே - அவுட்டில் சிவசுப்ரமணியம் என்பவரது வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் இறந்தனர்.



இதில் ஆனந்தனின் மகன் லோகுராம் மகள் அட்சயா அருக்காணியின் மகள் மகாலட்சுமி ஆகியோரும் இறந்துள்ளனர். இவர்கள் மூவரும் நடூர் நகராட்சி துவக்கப் பள்ளியில் படித்தனர்.மகாலட்சுமி, லோகுராம் ஆகிய இருவரும் நான்காம் வகுப்பும் அட்சயா மூன்றாம் வகுப்பும் படித்தனர். நவ. 30ம் தேதி கடைசியாக மூவரும் பள்ளிக்கு வந்தனர். டிச. 1ம் தேதி இரவு நடந்த விபத்தில் துாங்கிய நிலையிலேயே இறந்தனர்.பள்ளியில் 30ம் தேதி மாணவி அட்சயா போர்டில் தமிழ் எழுத்துக்களை எழுதி சக மாணவ - மாணவியரிடம் படித்து காண்பித்துள்ளார்.




வகுப்பு ஆசிரியை சுகந்தி கூறுகையில் ''அட்சயா நன்கு படிக்கும் முதல் ரேங்க் மாணவி. கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். இம்மாணவி கடைசியாக கரும்பலகையில் எழுதிய தமிழ் எழுத்துக்களை நினைவாக அழிக்காமல் அப்படியே வைத்துள்ளோம்'' என்றார்.சக மாணவியர் கூறுகையில் 'அட்சயா எழுதியதை பார்க்கும்போது அவளை நேரில் பார்ப்பது போல் உள்ளது. திங்கள் கிழமை பள்ளிக்கு நான்கு 'புராஜக்ட்' செய்து கொண்டு வருவேன் என கூறினார். ஆனால் திங்கள் கிழமை அவள் இறந்து விட்டாள் என்ற செய்தி கேட்டு நாள் முழுவதும் அழுது கொண்டே இருந்தோம். எங்களால் அட்சயாவை மறக்க முடியாது' என்றனர்.