எப்போது எங்கிருந்து சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்? - வானவியலாளர்கள் கருத்து!


எதிர்வரும் 26ம் தேதி நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை எங்கிருந்து முழுவதுமாக காணமுடியும் என்பது குறித்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவு வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. நாளை கிறிஸ்துமஸ் நடைபெற இருக்கும் நிலையில் நாளை மறுநாள் நடைபெறும் இந்த சூரிய கிரகணம் 'ரிங் ஆஃப் ஃபயர்' எனப்படுகிறது. அதாவது நிலவு சூரியனை முழுவதும் மறைத்திருக்க விளிம்புகளில் வெளிப்படும் சூரிய வெளிச்சம் ஒரு தங்க மோதிரத்தை போல காட்சியளிக்கும்.
இந்த நிகழ்வு இந்தியாவில் பெங்களூரு, சென்னை, மும்பை ஆகிய இடங்களில் 75 % வரை காணமுடியும். ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் 66% முதல் 44% வரையான கிரகணத்தை காணலாம். இந்தியா முழுவதும் காணமுடியாத இந்த கிரகணத்தை கேரளாவின் கன்னூர் முதல் தெற்கு பகுதிகள் வரை உள்ள இடங்களில் தெளிவாக காண முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நார்வேயை சேர்ந்த டைம் அண்ட் டேட் ஆய்வியல் நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி இந்தியாவில் கிரகணம் சரியாக காலை 7.59 மணியளவில் தொடங்கும் எனவும், பாதி கிரகணமாக 9 மணிக்கு காட்சியளிக்கும் எனவும், பிறகு முழுமையான கிரகணமாக 10:47 மணிக்கு உருவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.