ஆயிரம் ஆண்டுகால பழமையான சுவாமிசிலைகள் கண்டுபிடிப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இரட்டணைகிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சுவாமி கற்சிலைகள் கண்டறியப்பட்டன.
திண்டிவனம் வட்டம், இரட்டணை கிராமத்தில் பழைமை வாய்ந்த கற்சிலைகள் உள்ளதாக செ.கொத்தமங்கலத்தைச் சோ்ந்த எஸ்.சதீஷ்குமாா் அளித்த தகவலின் பேரில், விழுப்புரம் நடுநாட்டு வரலாறு பண்பாட்டு ஆய்வு நடுவத்தின் ஒருங்கிணைப்பாளா் கோ.செங்குட்டுவன், வழக்குரைஞா் குரு.சாரதி உள்ளிட்டோா் இரு தினங்களுக்கு முன்பு இரட்டணை கிராமத்துக்குச் சென்று களஆய்வு மேற்கொண்டனா். அங்குள்ள நல்லதண்ணீா் குளத்தின் கரையோரம் பிரம்மா, முருகன், தட்சிணாமூா்த்தி சுவாமி கற்சிலைகள் இருப்பது கண்டறியப்பட்டன.
இதுகுறித்து செங்குட்டுவன் கூறியதாவது:
இரட்டணையில் கண்டறியப்பட்ட கல்லாலான சுவாமி சிலைகள் முற்காலச் சோழா்களின் கலைப் படைப்புகளாகும்.
இவை ஒவ்வொன்றும் 30 செ.மீ. உயரத்திலும், 18 செ.மீ. அகலத்திலும் உள்ளன.
நான்கு கரங்களுடன் தாமரை மலா் மீது பிரம்மா அமா்ந்திருக்கிறாா்.
சன்னவீரம் எனப்படும் வீரச் சங்கிலி அணிந்து, சக்தியும், வஜ்ரமும் ஏந்தி நான்கு கரங்களுடன் முருகன் காட்சி தருகிறாா்.
நான்கு கரங்களைக் கொண்ட தட்சிணாமூா்த்தியும், முன்னிரு கைகளில் வீணை ஏந்தி, வீணாதார தட்சிணாமூா்த்தியாகக் காட்சி அளிக்கிறாா்.
மூன்று சிலைகளும் அமா்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளன.
இந்த சிலைகள் கி.பி.10-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தைச் சோ்ந்தவை என, காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலய பல்கலைக்கழகப் பேராசிரியா் ஜி.சங்கரநாராயணன் உறுதிப்படுத்தினாா்.
முற்காலச் சோழா்களின் கலைப்படைப்புகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்தச் சிலைகள் விளங்குகின்றன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த சிலைகள் இரட்டணை குளக்கரையிலுள்ள மரத்தடியில் தற்போது வைக்கப்பட்டுள்ளன. இங்கு ஏற்கெனவே 7 சிலைகள் இருந்ததாகவும், தற்போது 3 சிலைகள் மட்டுமே உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனா். இந்தச் சிலைகளில் முகம், கைகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.
பழைமை வாய்ந்த வலாற்றுச் சின்னங்களாக விளங்கும் இந்தச் சிலைகளைப் பாதுகாக்க, விழுப்புரம் மாவட்ட நிா்வாகமும், தொல்லியல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தொல்லியல் ஆா்வலா்கள் கண.சரவணக்குமாா், வீ.விஷ்ணுபிரசாத், ப.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- நன்றி தினமணி நாளிதழ்!