சி.ஏ., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை


இந்திய சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்கள் நிறுவனமான, ஐ.சி.ஏ.ஐ.,யின் தென் மாநில செயலர் ஜலபதி நேற்று கூறியதாவது:சி.ஏ., மாணவர்கள் நல நிதி அறக்கட்டளை, பொருளாதார ரீதியாக பின்தங்கிய, சி.ஏ., படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளது.சி.ஏ., இன்டர்மீடியட் மற்றும் ஐ.பி.சி.சி., படிக்கும் மாணவர்கள், சார்ட்டர்ட் அக்கவுன்டன்டின் கீழ், நடைமுறை பயிற்சி மேற்கொண்டு வருவர். இவர்களுக்கு, மாதம், 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.சி.ஏ., பைனல் கோர்ஸ் படித்து, நடைமுறைப் பயிற்சி மேற்கொள்வோருக்கு, மாதம், 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்களுக்கு கடந்த ஏப்., முதல், 2020 மார்ச் வரையிலான ஓராண்டு காலத்துக்கான உதவித்தொகை முழுமையாக கிடைக்கும்.ஆண்டுக்கு, 3 லட்சம் ரூபாய்க்கு கீழ், குடும்ப வருவாய் உள்ளதற்கான சான்று, தாங்கள் பயிற்சி மேற்கொண்டு வரும் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் மற்றும் ஐ.சி.ஏ.ஐ., கவுன்சில் நிர்வாகியிடம் பரிந்துரைக் கடிதம் ஆகியவற்றுடன், உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.அறக்கட்டளை குழு, விண்ணப்பங்களைப் பரிசீலித்து, உதவித்தொகை பெற உள்ள மாணவர்களை தேர்வு செய்வர். விண்ணப்பிக்க, வரும், 27ம் தேதி கடைசி நாள்.மேலும் விபரங்களுக்கு: https://www.icai.org/new_post.html?post_id=16112&c_id=219 இவ்வாறு, அவர் கூறினார்.