இலவச லேப்டாப் கட்டுப்பாடுகள் தேர்தல் முடிந்ததும் தளர்த்த வாய்ப்பு

சென்னை: தமிழக அரசின் இலவச, &'லேப்டாப்&' திட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், தேர்தல் முடிந்ததும், தளர்த்தப்படுமா என, மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்த்துள்ளனர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக, இலவச லேப்டாப் திட்டத்தை, ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். அவரது மறைவுக்கு பின், இந்த திட்டத்தில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது.பின், பல தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்ததால், மீண்டும் வழங்க அரசு முடிவு எடுத்தது. இதையடுத்து, லேப்டாப் வழங்கும் பணி துவங்கியது. ஆனால், முன்னுக்கு பின் முரணான வகையில், விதிகளிலும், நடைமுறையிலும், பல மாற்றங்கள் செய்யப்பட்டன. முறையாக, பிளஸ் 2 படித்து வெளியேறிய மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்காமல், தற்போது, பிளஸ் 2 படித்து கொண்டிக்கும் மாணவர்களுக்கும், பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கும், லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.மேலும், கடந்த ஆண்டு, பிளஸ் 2 படித்தவர்களுக்கு, அப்போது, லேப்டாப் தரப்படவில்லை. இப்போது தருவதற்கு, அவர்கள், உயர் கல்வி படித்து கொண்டிருந்தால் மட்டுமே, லேப்டாப் உண்டு என, புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பள்ளி படிப்பை முடித்து, தொலைநிலை கல்விக்கு சென்றவர்களுக்கும், வேலைக்கு சென்றவர்களுக்கும், லேப்டாப் மறுக்கப்பட்டுள்ளது.ஆனால், பிளஸ் 2வுக்கே வராமல், பிளஸ் 1 கூட, இன்னும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கும்போது, பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கு மட்டும், ஏன் லேப்டாப் மறுக்கப்படுகிறது என, மாணவர்களும், பெற்றோரும் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிளஸ் 2 வரை படித்து, லேப்டாப் கிடைக்காத மாணவர்கள், அரசுக்கு கோரிக்கை மனு அளித்தால், அதுபற்றி பரிசீலிக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள், ஜன., 4ல் முடிவுக்கு வருகின்றன. அதன்பின், மாணவர்களின் கோரிக்கை அடிப்படையில், கட்டுப்பாடுகளை தளர்த்த வாய்ப்பு உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.