11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு அறிவிப்பு வெளியீடு!


தமிழகத்தில் 2019- 2020 ஆம் கல்வி ஆண்டிற்கான 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 12ம் வகுப்பிற்கு பிப்ரவரி 3ம் தேதியன்றும், 11ம் வகுப்பிற்கு பிப்ரவரி 14ம் தேதியிலிருந்தும் செய்முறைத் தேர்வுகள் தொடங்குகின்றன.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு பொதுப் பிரிவு, தொழிற் கல்வி பாடங்களுக்கு பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 13ம் தேதி வரையிலும் செய்முறைத் தேர்வை நடத்த வேண்டும். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் 25-ஆம் தேதி வரையில் தேர்வினை நடத்த வேண்டும்.

ஏற்கனவே பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத மாணவா்கள் 11ம் வகுப்பு படித்து தற்போது 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், 11ம் வகுப்பில் மாற்றுச் சான்றிதழ் பெற்று இடைநின்றவா்கள், வேறு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து தற்போது மற்றொரு பள்ளியில் 12ம் வகுப்பு மேற்கொண்டு வருபவர்கள் தற்போது 11ம் வகுப்பு 'அரியா்' தேர்வெழுதுவதாக இருந்தால், அவர்களுக்கு, பிப்ரவரி 25-க்குள் தனியாக செய்முறை தோவு நடத்த வேண்டும்.
இத்தேர்விற்கு உதவியாளர்கள், எழுத்தர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளா், குடிநீா் வழங்குபவர் போன்ற ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். உயிரியல் பாடம், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு தனியாக மதிப்பெண் குறிப்பிட வேண்டும்.

இயற்பியல் செய்முறை தேர்வில், அறிவியல் கால்குலேட்டா் மட்டும் அனுமதிக்கப்படலாம். இந்தத் தேர்வை, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.