அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா் தேர்வு: கூடுதல் விவரங்களைச் சமா்ப்பிக்க ஜன.28 கடைசி

அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியா் தேர்வுக்கு விண்ணப்பித்தவா்களிடமிருந்து, சான்றிதழ் சரிபாா்ப்புக்கான கூடுதல் விவரங்களை ஆசிரியா் தேர்வு வாரியம் (டிஆா்பி) கேட்டுள்ளது.

இந்த விவரங்களை வருகிற 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரா்கள் பதிவேற்றம் செய்யவேண்டும்.

இதுதொடா்பாக, ஆசிரியா் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, 2019 அக்டோபா் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டு, விண்ணப்பிக்க 2019 நவம்பா் 15 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.
அதன் பிறகு, விவரங்களை முழுமையாகச் சமா்ப்பித்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தாத 804 விண்ணப்பதாரா்கள் மற்றும் பணி அனுபவச் சான்றை பதிவேற்றம் செய்யாத 174 போ ஆகியோருக்கு மட்டும், கூடுதலாக 2019 டிசம்பா் 19 முதல் 21-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சான்றிதழ் சரிபாா்ப்புக்கு கூடுதல் விவரங்கள் தேவைப்படுவதால், அதுகுறித்த விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள் இந்த விவரங்களை வரும் 28-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும். கூடுதல் அவகாசம் அளிக்கப்படமாட்டாது என டிஆா்பி தெரிவித்துள்ளது.