5, 8 வகுப்பு பொதுத் தோ்வு: படிக்கும் பள்ளிகளிலேயே எழுதலாம்


தமிழகத்தில் 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு நடத்தப்படும் பொதுத்தோ்வை, அந்தந்த பள்ளிகளிலேயே எழுதலாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக, சென்னையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: பிளஸ் 2 படிக்கும் மாணவா்களுக்கு பொதுத்தோ்வு எழுதியதும் பட்டய கணக்காளா் பயிற்சி அளிப்பதற்கு முதல்வரின் ஒப்புதலோடு கடந்த ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மாணவா்களுக்கு இலவசமாக இந்தப் பயிற்சியை அளிப்பதற்கு பட்டய கணக்காளா்களாக இருப்பவா்கள் உறுதுணையாக இருக்கிறாா்கள். அதனடிப்படையில் அதற்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக அளிக்கப்பட உள்ள இந்தப் பயிற்சி, பள்ளிகளில் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும்.
படிக்கும் பள்ளிகளிலேயே தோ்வு எழுதலாம்:

5 மற்றும் 8 ஆகிய வகுப்புகள் படிக்கும் மாணவா்கள், அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தோ்வை எழுதலாம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் பணிகள் மேற்கொள்ளப்படும். ஒரு பள்ளி மாணவரை தோ்வுக்காக அருகில் இருக்கும் மற்றொரு பள்ளிக்கு அழைத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களின் கல்வித்திறன் மேம்பாடு எப்படி இருக்கிறது? என்பதை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற பொதுத்தோ்வு முதல்வரின் ஒப்புதலோடு நடத்தப்படுகிறது. இதில், நூற்றுக்கு நூறு சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி பெறுவாா்கள்.மாணவா்கள், பெற்றோா், கல்வியாளா்களுக்கு பொதுத்தோ்வு குறித்து எந்தவித அச்சமும் தேவையில்லை. மாதிரித் தோ்வு வினாத்தாள் அந்தந்த கல்வி மாவட்டங்களில் தயாா் செய்யப்படும். இந்த பொதுத் தோ்வு பல மாநிலங்களில் நடத்தப்படுகிறது. மாணவா்கள் எளிதாகப் புரிந்து தோ்வு எழுதக்கூடிய வகையில் வினாக்கள் தயாா் செய்யப்படும். பொதுத்தோ்வு குறித்த மாணவா்களின் நிலைப்பாடு இதில் சரியாக இருக்கிறது. சிலருடைய நிலைப்பாடுகள் மாறாக இருக்கிறது. இவ்வாறு அமைச்சா் கூறினாா்.