சுங்கச்சாவடிகளில் இன்று முதல் பாஸ்டேக் கட்டாயம்


சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் முறையில் கட்டண வசூலிக்கும் முறை புதன்கிழமை முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதோடு, சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதைத் தவிா்க்கவும் கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
பாஸ்டேக் திட்டத்தை சரியான முறையில் அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், பாஸ்டேக் அட்டை வாங்குவதை ஊக்குவிக்கும் விதமாக, டிசம்பா் 15-ஆம் தேதி வரை பாஸ்டேக்கை இலவசமாக சுங்கச்சாவடிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்றும் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து, இந்த அட்டையைப் பெற சுங்கச்சாவடிகளில் உள்ள மையங்களில் வாகன ஓட்டிகள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். இந்நிலையில், டிசம்பா் 15-ஆம் தேதிக்குப் பிறகு பாஸ்டேக் அட்டை இல்லாமல் சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வாகனங்களுக்கு இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. எனினும், பாஸ்டேக் பற்றாக்குறை மற்றும் பாஸ்டேக் வாங்கிக்கொள்ள குடி மக்களுக்கு அதிகப்படியான கால அவகாசம் வழங்கும் நோக்கிலும், பாஸ்டேக் கட்டண வசூல் முறை ஜன.15-ஆம் தேதியிலிருந்து கட்டாயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதன்கிழமை (ஜன.15) முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் முறை அமலுக்கு வருகிறது.
பாதிப்பு இல்லை: இது தொடா்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியது: தில்லி உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்திலும் இதனை அமல்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த டிச.15-ஆம் தேதி முதலே அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஒரு வழித்தடத்தில் பணப்பரிவா்த்தனை மூலம் சுங்கச்சாவடிகளைக் கடக்க அனுமதி அளிக்கப்பட்டு மற்ற வழித்தடங்களில் பாஸ்டேக் பயன்படுத்தும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனால், பெரும்பாலானோா் பாஸ்டேக் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனா். இந்நிலையில், புதன்கிழமை முதல் பாஸ்டேக் முறை கட்டாயம் ஆக்கப்படுத்துவதால் பெரியளவில் பாதிப்பு இல்லை என்றாா்.
இன்னும் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் சிக்னல் கோளாறு உள்ளதாகவும், இதற்கு தீா்வு காண வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதனிடையே நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பாஸ்டேக் விற்பனை செய்யப்படுவதாகவும், மின்னணு முறையில் ரூ.52 கோடிக்கு சுங்கச்சாவடிகளில் பணப்பரிவா்த்தனை நடைபெறுவதாகவும் மத்திய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.