Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 31, 2020

முறையாக கல்வி பயிற்றுவிக்க முடியாத நிலையில்தான் பொதுத்தேர்வை எதிர்க்கிறார்களோ? தமிழக பாஜக கேள்வி!

முறையாக கல்வி பயிற்றுவிக்க முடியாத நிலையில்தான் பொதுத் தேர்வை எதிர்க்கிறார்களோ என்று 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளுக்கு ஆதரவாக தமிழக பாஜக குரல் எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-20-ம் கல்வியாண்டில் (நடப்பு கல்வியாண்டு) இருந்து கல்வியாண்டின் இறுதியில் பொதுத்தேர்வு நடத்துவதற்கு அரசு ஆணையிட்டு இருக்கிறது. இதில் வளர்அறி மதிப்பீடு மூலம் 40 மதிப்பெண்களும், தொகுத்தறி மதிப்பீடு மூலம் 60 மதிப்பெண்களும் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தேர்வு நடக்கும்.




விடைத்தாள்கள் குறுவள மைய அளவிலேயே அனைத்து பாடங்களுக்கான மதிப்பீட்டு பணி நடைபெற வேண்டும். விடைத்தாள்களை, 5, 8-ம் வகுப்பு போதிக்கும் அந்தந்த பாட ஆசிரியர்களை கொண்டே மதிப்பீடு செய்ய வேண்டும்.பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மதிப்பெண் பட்டியல்களில் இருந்து ஒவ்வொரு மாணவருக்குரிய மதிப்பெண்ணை பாடவாரியாக மதிப்பெண் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் மேற்கண்ட நடைமுறையை பல அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும், ஆசிரியர் சங்கங்களும் கடுமையாக எதிர்க்கின்றன. குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படும் என்றும், இது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் என்று கவலைப்படுகிறார்கள். அவர்களின் கவலை சரியா? குழந்தைகளுக்கு மன அழுத்தம் எப்படி ஏற்படும்?

பாடத்திட்டத்தின் படி, பாடபுத்தகங்களில் உள்ளபடி குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்க வேண்டியது ஆசிரியர்களின், பள்ளிகளின் கடமை. தேர்வுகளில் அந்த ஆண்டில் பயிற்றுவித்த பாடங்களில் இருந்தே வினாத்தாள் அமைக்கப்படும். ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் மிக புத்திசாலித்தனமாகவே இருப்பார்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. பொது தேர்வு என்றாலும் பாடத்திட்டத்திலிருந்து விலகி எந்த கேள்வியும் இடம்பெறாது. அப்படி இருக்கையில் இதை ஏன் எதிர்க்க வேண்டும்? குழந்தைகள் சரியாக விடை எழுத மாட்டார்கள் என்ற அவநம்பிக்கை ஏன்?




"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவை நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே" என்ற பாடல் வரிகளுக்கேற்ப, எந்த குழந்தையும் அறிவில் குறைந்ததாக இருக்க முடியாது. அறிவிற் சிறந்ததாக செய்வது ஆசிரியர்களின் பயிற்றுவிப்பிலே தான் என்பதை மறுக்க முடியாது. ஆனால், முறையாக கல்வி பயிற்றுவிக்க முடியாத நிலையில்தான் பொது தேர்வை எதிர்க்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. குழந்தைகளின் அறிவுத்திறன் மழுங்கவில்லை, மாறாக கல்வித்தரம் மழுங்கியுள்ள காரணத்தினாலேயே பொது தேர்வை ஏற்று கொள்ள தயங்குகிறார்கள்.




அரசியல் கட்சிகள் இதை எதிர்க்க காரணம் என்ன? 30 வருடங்களுக்கு முன்னர், குறைவான அளவிலே இருந்த தனியார் பள்ளிகள் இன்று புற்றீசல் போல் பரவிக்கிடப்பதற்கு காரணம் கல்வி வியாபாரமாகி விட்டது தான். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கல்வி வியாபாரமாகி விட்டது என்றால் யாரேனும் மறுக்க முடியுமா? மறுக்க முடியாத இந்த உண்மையை, கொடூரத்தை மறைக்கவே குழந்தைகளின் அறிவு மீதான பழியை சுமத்தி தங்களின் மீதான குறை வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் கடும் எதிர்ப்பு எழுகிறது. தரமான கல்வியை கொடுத்தால் அச்சம் ஏன்? மேலும் பொது தேர்வின் விடைத்தாள்களின் மதிப்பேடு குறுவள மைய அளவிலேயே நடைபெறும் என்பதும், வளர்அறி மதிப்பீடு மூலம் 40 மதிப்பெண்கள் அளிக்கட்டும் என்ற முறை உள்ள நிலையில் இந்த திட்டத்திற்கான எதிர்ப்பு ஏன் என சந்தேகம் வலு பெறுகிறது.




மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது குழந்தைகளுக்கா? அல்லது இது நாள் வரை மனம் போன போக்கில் கற்பித்து கொண்டிருந்த பள்ளிகளுக்கா? கல்வி வியாபாரிகளுக்கா? அரசு எந்த மாற்றத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் படைத்த சங்கங்களுக்கா? தமிழக அரசின் இந்த முடிவினை வரவேற்போம். குறிப்பாக கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர். பெற்றோர்கள் இந்த மாற்றத்திற்கு, முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.